இனப் பிரச்சினைக்கான தீர்வை இந்த ஆண்டிற்குள் முன்வைக்க வேண்டும்
ஸ்ரீலங்கா அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை இந்த ஆண்டிற்குள் நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமது கட்சியின் பெயரை தமிழர் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் வரதராஜப் பெருமாள் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள கட்சியின் காரியாலத்தில் இடம்பெற்ற மத்தியகுழுக் கூட்டம் கட்சித் தலைவர் சுகு சிறீதரன் மற்றும் நிர்வாகச் செயலாளர் சிவராஜா மோகன் தலைமையில் நேற்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெற்றது.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவின் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்,
நாட்டிலுள்ள மக்கள் இது நல்லாட்சி தான் என்று உணரும் வகையில் அரசு செயற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த கூட்டத்தின் போது ஆராயப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








