Breaking News

வடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடி மறைத்ததே கடந்த அரசின் வரலாறு : விஜயகலா

கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் வட மாகாணத்திற்கு வந்து மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து வெளிநாடுகளில் அவை குறித்து பேசாமல், பிரச்சினைகளை மூடி மறைத்தனர் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்ட நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சர் வடக்கிற்கு விஜயம் செய்து மக்கள் படும் துன்பங்களை நேரடியாக பார்த்து ஆதங்கப்பட்டதாக தெரிவித்த விஜயகலா, எதிர்வரும் வருடத்தில் மயிலிட்டி துறைமுகம் வட பகுதி மீனவர்களுக்கு முழுமையாக கையளிக்கப்படும் என உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டார்.

மயிலிட்டி பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களின் வாழும் நிலையில், அவர்களது பாரம்பரிய பிரதேசத்தை முழுமையாக விடுவித்து அவர்களுக்கு சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார். குறித்த மக்களின் அபிவிருத்தி அரசாங்கத்திற்கு ஒரு பக்கபலமாக இருக்குமென்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா குறிப்பிட்டார்.