Breaking News

ஏமாற்றிய வைத்தியர் சத்தியலிங்கம்!! ஆத்திரத்தில் அனந்தி



முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் விடயத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சையோ, மத்திய அரசினுடைய சுகாதார அமைச்சையோ நாங்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை எனத் தெரிவித்தார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடாத்தும் விடயத்தில் வடமாகாண சபை கொண்டுள்ள நிலைப்பாடு? மற்றும் விஷ ஊசி விவகாரம் தொடர்பில் ஊடகம் ஒன்று வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபை அமையப் பெற்றதன் பின்னர் பூநகரிப் பகுதியில் 50 பெண்களுக்கு கர்ப்பத் தடை ஒரே தடவையில் மேற்கொள்ளப்பட்ட போது ஒரு கர்ப்பிணித் தாய் அநியாயமாக உயிரிழந்தமை தொடர்பில் வினா எழுப்பப்பட்ட போது எங்களுடைய வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களுக்கான சிறுநீர்ப் பரிசோதனையை மேற்கொள்ள வசதியின்மை காரணமாக கர்ப்பத் தடை மேற்கொள்ளப்பட்டதாகவும் , அப்போது அவர் மரணித்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

யுத்தத்தால் அங்கவீனமானவர்களுக்கு உடனடியாகச் சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. ஆனால், கர்ப்பத் தடை அவ்வாறு அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டியதல்ல. இதற்கு வடமாகாணச் சுகாதார அமைச்சர் கூறிய விளக்கத்தை என்னால் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

தற்போது வடக்கு மாகாண சுகாதார அமைச்சும், மத்திய சுகாதார அமைச்சும் இணைந்து செயற்படுகின்றதொரு சூழலில் முன்னாள் போராளிகள் சர்வதேச மருத்துவக் குழுவொன்றினாலேயே பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பது என்னுடையதும், முன்னாள் போராளிகளின் உறுதியான முடிவாகும்.

முன்னாள் போராளிகள் அச்சம் காரணமாக அல்லது இராணுவத்தினுடைய நெருக்குதல் காரணமாக இந்த விடயத்திலிருந்து ஒதுங்க நினைத்தாலும் அவர்களுடைய மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் தங்கள் உறவுகளுக்கு உண்மையில் என்ன நடந்தது? என்பதை அறிய விரும்புகின்றனர். உண்மையிலேயே அவ்வாறு விஷ ஊசி ஏற்றப்பட்டிருந்தால் மாற்று மருந்தைச் செலுத்தி அவர்களது உயிரைக் காப்பாற்ற வேண்டிய தேவையுள்ளது.

முன்னாள் போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் நச்சு ஊசி ஏற்றப்பட்டதா? என்பது தொடர்பில் எங்களுக்குப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. எனவே, இந்த நச்சு ஊசி விவகாரம் தொடர்பில் நாம் பலரிடமும் விசாரணைகள் நடாத்தியதன் அடிப்படையில் முன்னாள் போராளிகள் மீது மெல்லக் கொல்லும் மருந்துகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

ஒரு தடுப்பூசி ஏற்றப்பட்டால் ஏன் ஏற்றப்பட்டது? எதற்காக ஏற்றப்பட்டது என்பது தொடர்பான ஆதாரபூர்வமான அட்டைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். பல புனர்வாழ்வு முகாம்களிலும் முன்னாள் போராளிகளான ஆண், பெண் இருபாலாருக்கும் வற்புறுத்தி இந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டிருப்பதாக அறிகிறோம். ஆகவே, இது தொடர்பான சந்தேகத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும். முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.