Breaking News

இந்தியாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறும் – வசந்த பண்டார எச்சரிக்கை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட்டால், இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் ஆபத்து உள்ளதாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த பண்டார எச்சரித்துள்ளார்.


கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை முன்னெடுக்க சீனாவுக்கு  அனுமதி அளித்துள்ளதால், சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

எனவே சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே  பாலம் அமைப்பதற்கான  அனுமதியை  அரசாங்கம்  இரகசியமாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. அந்த இரகசிய வாக்குறுதியே அமைச்சர் கபீர் காசிம் மூலம்,  இந்தோனேசியாவில்  வெளியாகியுள்ளது.

பாலம் அமைப்பதற்கு மட்டுமல்ல, அதன் பின்னர் திருகோணமலையிலிருந்து தமிழ்நாட்டுக்கு 126 கி.மீ தூரத்திற்கான தொடருந்துப் பாதையும் அமைக்கப்படவுள்ளது.

இதன் மூலம் திருகோணமலையிலிருந்தும் இந்தியாவிலிருந்து பொருட்கள் கப்பல்கள், படகுகள் மூலம் வருவதற்குப் பதிலாக மூலம் வர ஆரம்பிக்கும்.

அத்துடன் இந்தியாவிலிருந்து ஆட்களும் இங்கு  வருவார்கள். திருகோணமலையில் எஞ்சியுள்ள  எண்ணெய்க் குதங்களும்  இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே பாலம் அமைக்கப்பட்டு, பூகோள  ரீதியில்  மாற்றத்தை ஏற்படுத்தும் போது அது சிறிலங்காவைப் பாதிக்கும். சமூக, அரசியல், பொருளாதார ரீதியில்  சிறிலங்காவில் நெருக்கடிகள் பிரச்சினைகள் தலைதூக்கும்.  கலாசார ரீதியில் சீரழிவுகள் ஏற்படும்.

சிறிலங்கா அரசின் இந்த முடிவு  நாட்டை பயங்கரமாக பாதிக்கும். எனவே இத்திட்டத்திற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. இதனால் இந்தியாவின்  காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறுவதையும் தடுக்க முடியாது. எனவே  நாட்டு மக்களை திரட்டி  இதற்கு  எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.