மஹிந்தவும் விக்கினேஸ்வரனும் இனவாதத்தை போதிக்கின்றார்கள்
மஹிந்த ராஜபக்ஷவின் இனவாதத்திற்கு விக்கினேஸ்வரன் உந்துசக்தியை வழங்கிக் கொண்டிருக்கிறார் என நேற்று சபையில் ஜே.வி.பி. எம்.பி.பிமல் ரத்னாயக்க குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்தை எதிர்க்கட்சியினர் எதிர்த்தனர். கூச்சலிட்டனர். படையினரை காட்டிக்கொடுக்கும் செயல் என விமர்சித்தனர்.
ஆனால் அரசாங்கத்திற்கு படையினரை காட்டிக்கொடுக்கும் தேவையில்லை. படையினரை மேலும் பலப்படுத்தி சம்பளங்களை அதிகரித்து தமது பக்கம் வைத்துக் கொள்ளவே அரசு விரும்பும்.
படையினரை காட்டிக்கொடுக்கும் தேவை
அரசுக்கு இருக்குமானால் ஏன் புதிதாக விமானப் படைக்கு போர் விமானங்களை கொள்வனவு செய்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் சர்வதேசத்திற்கு காட்டிக் கொடுத்தாலும் படையினரை அரசு காட்டிக் கொடுக்காது.
விக்கினேஸ்வரன் வடமாகாண சபை ஊடாக மக்களுக்கு என்ன அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து கொடுத்துள்ளார்.
எதனையும் மக்களுக்கு செய்து கொடுத்தாரில்லை. மாறாக வடக்கில் இனவாதத்தை ஊக்குவிக்கின்றார்.
மக்கள் மத்தியில் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் செய்வது மட்டுமல்லாமல் தெற்கில் மஹிந்தவினதும் அவரது கூட்டாளிகளினதும் இனவாதத்திற்கு உந்துசக்தி வழங்குகின்றனர்.
மஹிந்தவும் விக்கினேஸ்வரனும் இனவாதத்தை போதிக்கின்றார்கள் என்றார்.