Breaking News

மாவை சேனாதிராஜாவின் கூட்டத்தில் கண்ணீர் புகை (காணொளி)

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ்
தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த நான்கு பேர்  சக்தி வாய்ந்த கண்ணீர்புகையை பிரயோகித்து பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவை சேனாதிராசாவின் சகோதரரும், இம்மகாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தங்கராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரும் பிரான்ஸில் உள்ள ஒரு நபரின் ஏற்பாட்டில் தான் மண்டபத்திற்குள் நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை கருவையை தமது உடைகளுக்குள் மறைத்து கொண்டுவந்தார்கள் என்று தெரிவித்தார்.


மகாநாடு ஆரம்பமாகி சற்று நேரத்தில் கார் ஒன்றில் ஒரு நபர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு இறக்கி விட்டு அந் நபர் காருக்குள் இருந்தார் என மகாநாட்டில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர்.
மண்டபத்திற்குள் வந்திருந்த நான்கு பேரிலும் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை அவதானித்து கொண்டிருந்ததாகவும் மாவை சேனாதிராசா பேச ஆரம்பித்ததும் அந்த நான்கு நபர்களும் கூச்சல் இட்டவாறு பொதுமக்கள் மீது கண்ணீர்புகையை பிரயோகித்ததாகவும் தங்கராசா தெரிவித்தார்.

ஏற்கனவே காரில் இருந்த அந் நபர் அவர்களை ஏற்றிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார் என மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மீது நச்சு வாயு கலந்த கண்ணீர்புகையை பிரயோகித்து குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் பொதுமக்கள் பாதிப்படைய காரணமாக இருந்தவர்களின் அடையாளங்கள் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் அந்த நான்கு நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.