நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சிக்கு அஞ்சி ஓடுகின்றது ; மஹிந்த
நல்லாட்சி அரசாங்கம் கூட்டு எதிர்க்கட்சிக்கு அஞ்சி தேர்தலை பிற்போடுகின்றது. உண்மையான மக்கள் ஆணை எங்குள்ளதென காணவேண்டுமாயின் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதமர் ஒருவர் தெரிவாகி 19 மாதங்கள் ஆகின்றன. முழுநாடும் இன்று ஸ்திரமற்றதன்மையை எதிர்நோக்கியுள்ளது.
நாட்டின் அனைத்து துறைகளிலும் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. இதனை எதர்கொள்ளமுடியாமல் அரசாங்கம் தேர்தல்களை ஒத்திவைக்கின்றது. பல்வேறு அச்சுறுத்தல்களை விடுத்து தமக்கு மக்கள் செல்வாக்குள்ளதாக காட்டிக்கொள்ள அரசாங்கம் முறபடுகின்றது.
கூட்டு எதிர்க்கட்சியுடன் தேர்தலில் போட்டியிட முடியாமையாலேயே அரசாங்கம் அவ்வாறு செயற்படுகின்றது. எனது அரசியல் வாழ்க்கையில் இவ்வாறானதொரு நிலையை இன்றே காண்கின்றேன்.
தேர்தல்களை நடத்தியே மக்கள் செல்வாக்கு குறித்து நான் கணிப்பிட்டேன். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் என்றால் ஓட்டம் பிடிக்கின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான காரணத்தை கூறமுடியாமல் உச்ச நீதிமள்றத்தில் நெருக்கடிகளை சந்தித்தனர்.
ஆனால் நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு நான் பொறுப்புக் கூறவேண்டுமென்றும் கூறுகின்றனர்.
2 வருடத்திற்கு முன்பதாகவே ஏன் ஜனாதிபதி தேர்தலை வைத்தீர்களென கேள்வியெழுப்புகின்றனர். 2015 ஆம் ஆண்டு ஆகுகையில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதால் நான் முன்கூட்டியே தேர்தலை வைத்து, அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்ததாகவும் கூறுகின்றனர்.
ஆனால் தமது இயலாமையை மூடிமறைத்துக்கொள்ளவே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் எனது அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்கள் ஆகவே, அங்கு உண்மைகளை மறைக்கக்கூடிய வாய்ப்பு இல்லை.
யாராவது அமைச்சரவையில் இருந்துகொண்டு முக்கிய அமைச்சையும் தன்னகம் வைத்துக்கொண்டு நாட்டில் நடப்பபை தெரியாமால் இருப்பாரானால் அவர் எவ்வாறு நாட்டையாழுவாளர்.
நான் மட்டும் முன்கூட்டியே தேர்தலை நடத்தவில்லை. 1982 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, 1999 ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரணதுங்க என பலர் உள்ளனர்.
ஆகவே, பொருளாதார நெருக்கடிகளுக்கு பயந்து நான்முன்கூட்டியே தேர்தலை நடத்தியமை ஏற்றுக்கொள்ள முடியாது.
உண்மையான மக்கள் செல்வாக்கை அறிய வேண்டுமாயின் உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டும். போலியாக காரணம் கூறுவதில் எவ்விதமான பலனும் இல்லை. 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் கூட்டாட்சி தொடருமென கூறுகின்ற நிலையில் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் என்வாகும். ஆகவே, கூட்டு எதிர்க்கட்சி மிகவும்அவதானத்துடன் செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.