புலிகளை காட்டிக்கொடுத்தவர்கள் எம்மை எழுக தமிழுக்கு அழைக்கின்றனர் -மாவை
ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியவில்லையாயின் நாம் இராஜதந்திர தோல்வியினை எதிர்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்று தமிழரசுக் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித் துள்ளார்.
ஐ.நா.பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் அரசாங்க தரப்பினருடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற நிலையில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம் எனக் கூறி அதனை முறியடிக்கும் செயலை நாம் செய்ய முடியுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கோப்பாய் கோமான் அமரர் கு.வன்னியசிங்கத்தின் 57 ஆம் ஆண்டு நினைவுப் பேருரை நேற்றையதினம் நீர்வேலி வாழைக்குலைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றுகையிலே விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்து இராணுவத்திடம் பணம்பெற்றுக் கொண்டு அந்த விடுதலைப் போராட்டத்தைப் தோற்கடித்தவர்கள் இப்போது எங்களைப்பார்த்து தம்மோடு போராட வருமாறு அழைக்கிறார்கள். என்று தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் சர்வதேச பங்களிப்பு தற்போது காணப்படும் நிலையில் அவற்றை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். தீர்வுத்திட்டமொன்றை வழங்க வேண்டுமென அரசாங்கத்திற்கு சர்வதேசம் வலியுறுத்தியும் வருகின்றது. இந்த இரு சந்தர்பங்களைப் பயன்படுத்தி நடப்பாண்டுக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை எட்ட வேண்டும். அவ்வாறு தீர்வு எட்டப்படாது தவறும் பட்சத்தில் இராஜதந்திர தோல்வியினை நாம் சந்திக்க வேண்டிவரும். இதனை தவிர்ப்பதற்காக எங்களுடைய ஆளுமையையும் அறிவையும் கடந்த காலத்தில் பெற்ற அனுபங்களையும் பயன்படுத்தி பொறுமையாக அவதானமாக செயலாற்றி வருகின்றோம்.
எனவே எமது பிரச்சினைக்கு சமஷ்டித் தன்மையிலான அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளவதற்கு நாங்கள் உழைக்காது விட்டால் அல்லது நாங்கள் அந்த சந்தர்ப்பத்தை தோற்கடிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டால் சர்வதேசமும் அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஒரு உடன்பாட்டில் செயற்படும்போது நாங்கள் மீண்டுமொரு இராஜதந்திர தோல்வியை சந்திக்கவேண்டுமா என்ற கேள்வி எம்மிடம் எழுகின்றது.
இதேவேளை விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் யுத்த களத்தில் போராடிக் கொண்டிருந்த போது நாங்கள் இங்கு மக்களின் தேவைகளுக்காக போராடினோம். அதனால் நாம் சாகடிக்கப்பட்டோம்.
விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்து இராணுவத்திடம் பணம்பெற்றுக் கொண்டு அந்த விடுதலைப் போராட்டத்தைப் தோற்கடித்தவர்கள் இப்போது எங்களைப்பார்த்து தம்மோடு போராட வருமாறு அழைக்கிறார்கள்.
குறிப்பாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யாழுக்கு விஜயம் செய்த பான்கிமூனிடம் எடுத்துக் கூறிவிட்டு நாம் வெளியே வரும்போது துரோகி என கூறியவர்கள், இப்போது தமது போராட்டத்திற்காக தம்மோடு இணையுமாறு கோருகின்றனர். இவ்வாறானவர்களின் பேராட்டங்களுடன் நாம் எவ்வாறு இணைந்துகொள்ள முடியும்.
இதேவேளை ஐ.நா.சபை பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் மற்றும் அரசாங்கத்தரப்பினர் ஆகியவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்ற நிலையில் போராட்டங்களை மேற்கொள்கின்றோம் எனக்கூறி அதனை முறியடிக்கும் செயலை நாம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. எனவே இந்த சூழ்நிலையை தந்திரோபாய இராஜதந்திரத்துடன் நாம் கவனமாக கையாளவேண்டியுள்ளது.
இச்சந்தர்ப்பத்திலும் எம்முடைய மக்கள் ஆக்கிரோசமடைந்து கிளர்ந்தெழுவார்களேயாயின் அதற்கு தடையாக நாங்கள் இருக்க மாட்டோம். எனினும் அத்தகைய செயற்பாட்டை எம்மக்கள் மேற்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
இதேவேளை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த வைத்தியர்கள், பேராசிரியர்கள் எம்மோடு கலந்துரையாடலை அண்மையில் மேற்கொண்டிருந்தனர். இதன் போது அவர்களுக்கு நாம் எடுத்துக்கூறியது யாதெனில், மக்களுடைய வெளிப்பாடுகளை வெளிக்காட்ட நாம் எவ்விதத்திலும் தடையாக இருக்க மாட்டோம். அத்துடன் இத்தகைய போராட்டங்கள் இனவாதம் பேசும் மகிந்த ராஜபக்ஷ குழுவினருக்கு புத்துணர்வாக இருந்து புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக இனவாதத்தைப் பேசி எமக்கு கிடைக்கக்கூடிய தீர்வுத்திட்டத்தையும் இல்லாமல் செய்து விடும் என்ற கருத்தினை அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம் என்றார்.
முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்