மீள்குடியேற்றாவிடின் அத்துமீறி நுழைவோம்! வலி.வடக்கு மக்கள் எச்சரிக்கை
வலி.வடக்கு மக்களை மூன்று மாதத்திற்குள் தங்களை சொந்த இடங்களில் மீள்குடி யேற்றாவிடின் அத்துமீறி நுழையப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மஹிந்த அரசாங்கத்தினால் கொடுமைப்படுத்தப்பட்ட தம்மை நல்லாட்சி அரசாங்கமும் ஏமாற்றுவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
அதேவேளை மூன்று மாதத்திற்குள் தங்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றாவிடின் வலி.வடக்கிற்குள் அத்துமீறி நுழைந்து கொட்டகைகள் அமைத்து வசிப்பதற்கும் அங்கு உணவுசமைத்து உண்பதற்கும் தீர்மானித்துள்ளதாக நேற்று சனிக்கிழமை எச்சரித்துள்ளனர்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலி.வடக்கு மீள்குடியேற்ற மக்கள் ஒன்றியமும் இணைந்து யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் பான் - கீ மூனின் வருகையை முன்னிட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டாமை மற்றும் பான் கீ மூன் அரசாங்கத்தை புகழ்ந்தமை தொடர்பிலும் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலைப்பாடுகள் குறித்தும் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்துள்ளனர்.