Breaking News

“எழுக தமிழ்“ போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் : மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம்

எதிர் வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள
‘எழுக தமிழ்’ வாழ்வுரிமைக்கான சனநாயக போராட்டத்திற்கு குழும வர்க்க பேதமின்றி இன விடுதலை வேண்டி போராடும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எம் வாழ்வியல் இருப்பை மேலும் வலுப்படுத்த அலையலையாய் அணிதிரள வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

‘எழுக தமிழ்’ வாழ்வுரிமைக்கான சனநாயக போராட்டத்திற்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் முழுமையான ஆதரவை வழங்குவதுடன் அனைவரையும் தார்மீக அடிப்படையில் கலந்து கொள்ளுமாறும் வேண்டு கோள் விடுக்கின்றோம்.

யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் தமிழ் மக்களின் வாழ்வியலில் மாற்றமோ ஏற்றமோ நிகழவில்லை.

மாறாக இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர்.

ஆகவே நாம் தோற்றுப் போன சமூகம் அல்ல விடுதலை வேள்வி பயணத்தின் இடைக்கால சரிவே தவிர முடிவில்ல.
விடுதலை வேண்டிய இனம் ஓய்ந்து விட முடியாது போராடிக் கொண்டே இருக்க வேண்டும் .

இலக்கு அடையும் வரை ஓய்வற்று உழைக்க வேண்டும் என்பதே எமக்கு காலமிட்ட கட்டளையாகவுள்ளது.
எனவே நூற்றாண்டை அண்மித்துள்ள எமது உரிமைப் போராட்டம் சற்றும் தளர்ந்து விட முடியாது. வடிவங்கள் மாறலாம் இலக்கு ஒன்று தான் இன்றைய நெருக்கடி நிலையை போக்குவதற்கு யாவரும் அணி திரளுங்கள் நல்லாட்சி எனும் மாயயை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்.

சிறைக்கைதிகள் விடுதலை, அபகரிப்பு நிலங்கள் விடுவிப்பு, சிங்களக் குடியேற்றம், புத்தவிகாரை அமைத்தல், இனப்பிரச்சினைத் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம் இவற்றில் இது வரை நடந்தவை என்ன?

ஆகவே தமிழ் மக்கள் ஒவ்வோரு வரும் இவ்வாறான உரிமை சார் சனநாயகப் போரட்டங்களில் அனைவரும் தார்மீக அடிப்படையில் கலந்து கொள்ள வேண்டியது எமது உரிமையும் கடமையும் பொறுப்பும் ஆகும் என கேட்டுக் கொள்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய முன்னைய பதிவு



முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்