பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க முதலீட்டாளர்களை தேடுகிறது அரசு
கடந்தகால யுத்த நடவடிக்கையால் சிதைந்துபோன பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள புனரமைத்து ஆரம்பிப்பதற்கும், ககட்டகக பென்சில் கரி அகழும் சுரங்கப் பணிக்கும் முதலீட்டாளர்களை அரசு தேடுகின்றது.
‘பரந்தன் இரசாயன கூட்டுதாபனம்’ என்ற பெயரில் முன்பு வடமாகாணத்தில் இயங்கி வந்த இரசாயனத் தொழிற்சாலையின் சேதமடைந்த கட்டடங்கள் இந்த வருட முடிவுக்கு முதல் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட வேண்டுமெனவும், தொழிற்சாலை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிக்க 525 மில்லியன் ரூபா தொகை அவசியப்படும் எனவும் அரசு தெரிவிக்கின்றது.
தொழிற்சாலை நிர்மாணப்பணி பூர்த்தியாகியதும் இலங்கைக்கு தேவையான மொத்த குளோரினையும் உற்பத்தி செய்யக்கூடியதாக இருப்பதோடு, அந்நிய செலவாணித் தொகையாக வருடாந்தம் 900,000 டொலர் தொகையை அரசு சேமிக்க முடியும் என்று அரசு கணித்துள்ளது.
அரசு குளோரினை தற்பொழுது திரவ நிலையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றது.
ககட்டககவில் உள்ள பென்சில் கரி அகழும், சுரங்கங்களின் பங்குகளில் 49 வீதமான பங்குகளை ஆஸ்திரேலியாவில் இதே தொழிலைச் செய்கின்ற ஒரு நிறுவனத்திற்கு அரசு விற்க முனைகின்றது என்று வர்த்தக சங்கத் தலைவர் கூறியுள்ளார்.
சிறிது காலம் மூடப்பட்ட நிலையிலிருந்த இந்தச் சுரங்கங்கள் அரசின் எந்த முதலீடும் இன்றி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, இப்பொழுது இலாபத்தில் இயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.