எழுக தமிழுக்குப் பின்னர் வடக்கு முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தென்னிலங்கை
‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நாளுக்குநாள் தென்னிலங்கையில் எதிர்ப்புகள் வெளிக்கிளம்பிய வண்ணமுள்ளன.
குறித்த பேரணி நாட்டில் இனவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடென குறிப்பிட்டுள்ள மஹிந்தவின் விசுவாசியான உதய கம்மன்பில, சி.வியை கைதுசெய்து சிறைவைக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி குறித்த பேரணிக்கு அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு ஒன்றையும் கம்மன்பில முன்வைத்துள்ளார்.
யாழில் அலையென திரண்ட ‘எழுக தமிழ்’ பேரணிக்கு எதிராக மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, ருவான் விஜேவர்தன போன்ற அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.