Breaking News

வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப மறுக்கின்றனராம் – கெரியிடம் மைத்திரி



பொருளாதார முன்னேற்றம் மற்றும் நல்லிண க்கத்தை நோக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய பயணத்தை தொடர்வதற்கு, சாத்தியமான எல்லா உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி உறுதி அளித்துள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜொன் கெரியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது,சிறிலங்காவின் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

“நல்லிணக்கத்தை மதிக்க சிறிலங்கா நடவடிக்கை எடுத்து வருவதற்கும், முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா ஊக்கம் அளிக்கிறது.

சிறிலங்காவின் கதை மிகச் சிறந்தது. நாம் சந்திப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர், “நல்லிணக்க செயல்முறைகளை குழப்புவதற்கு விரும்புகின்ற, வடக்கிலும் தெற்கிலும் உள்ள உறுதியற்ற நிலையை ஏற்படுத்த விரும்பும் சக்திகளினது கடுமையான பல சவால்களை சிறிலங்கா அரசாங்கம் சந்திக்கிறது.

உதாரணமாக, கடும் போக்குவாத குழுக்களின் அழுத்தங்களால் வடக்கில் உள்ள சிறியளவு மக்கள் தமது நிலங்களுக்குத் திரும்ப மறுத்து வருகின்றனர்.

அதுபோன்று, தெற்கிலுள்ள சில குழுக்கள் நல்லிணக்க செயல்முறைகளைக் குழப்ப முயற்சிக்கின்றன.

ஆனால் கூட்டு அரசாங்கம், எதிர்ப்புகள் இருந்தாலும், நல்லிணக்க செயல்முறைக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.