அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேகத்திற்குரியது – சி.வி
தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேகத்தை எழுப்புவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இருப்பையும் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு, வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நாட்டில் எந்த இடத்திலும் புத்தர் சிலை எழுப்ப முடியும் எனவும் அது தமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூறிவருவதாகவும் நடைமுறையிலும் சிலைகளையும் விகாரைகளையும் அவர்கள் எழுப்பி வருகின்றார்கள் எனவும் வட மாகாண முதலமைச்சர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பூராகவும் பரந்து வாழ்ந்த தமிழ்ப் பேசும் மக்களைத் தமது வாழ்விடங்களில் இருந்து 1958, 1961,1974, 1977, 1983 போன்ற வருடங்களில் ஏற்பட்ட கலவரங்களின் ஊடாகவும் வேறு விதங்களிலும் இடம்பெயர வைத்ததாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இதன்மூலம் தமிழர்கள் தமது வசிப்பிடங்களையும் வணக்கஸ்தலங்களையும் கைவிட்டுச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டு, முக்கிய நகரங்களை விட ஏனைய இடங்களில் தமிழ்ப் பேசும் மக்களின் பரம்பலை ஏறத்தாழ இல்லாமல் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பலரை வெளிநாடுகள் நோக்கிச் செல்ல தூண்டும் வகையில் வன்முறைகளில் ஈடுபட்ட அரசாங்கம், பின்னர் போர்க்காலத்தில் பலவிதமான கொடூரங்களிலும் போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டு தமிழ் மக்களில் பலரை நிர்மூலமாக்கியதாக வட மாகாண முதலமைச்சர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரை யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் தொடர்ந்தும் வைத்திருந்து தமிழர்களின் வாழ்விடங்களை விட்டகலாது வாழ்வாதாரங்களைச் சுரண்டுவதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
பெரும்பான்மையின் ஊடுருவல் பல விதங்களில் பாரம்பரிய தமிழ்ப் பேசும் இடங்களில் பரவி வருவது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.