Breaking News

உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் : வட மாகாண சபையில் பிரேரணை



உடுவில் மகளிர் கல்லூரியில் அதிபர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட நிர்வாக பிரச்சினைகளின்போது மாணவிகள் நடத்தப்பட்ட விதம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது தொடர்பில் வட மாகாண சபையில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள வட மாகாண சபை அமர்வில் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவினால் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவிகள் மீது தகாத வார்த்தைகளை பிரயோகித்தமை, தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் முறையிட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த கல்லூரியில் இந்து மதத்தை பின்பற்றும் 90 வீதமான மாணவிகள் கற்கும் நிலையில், அவர்களுக்கு வழிபாட்டிடம் கட்டிக்கொடுக்கப்படாமை மற்றும் சில ஆசிரியர்கள் கல்விசார் தகைமைகளை கொண்டிருக்கவில்லையென முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.