சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் : ஐ.நாவில் சிவாஜி
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும் ஐ.நா மனித உரிமை பேரவையில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை பேரவையின் 33ஆவது அமர்வில் கலந்துகொண்டுள்ள அவர், இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை செயற்படுத்தாமல் வஞ்சிக்கும் இலங்கை அரசாங்கம், தற்போது நல்லிணக்கம் தொடர்பில் சிறிதும் கூச்சமின்றி கதைத்து வருவதாக சிவாஜிலிங்கம் இதன்போது குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட்டு அவர்களது அரசியல் உரிமைகள் மீள வழங்கப்படும் வரை நல்லிணக்கம் சாத்தியமில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து தீர்மனங்களையும் நிறைவேற்றி, இயல்பு நிலையை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகங்களை நிறுவ வேண்டுமெனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.