Breaking News

தமிழினத்தின் கொழுகொம்பான வர்த்தகப் பெரு மக்களே!

அன்புமிகு வர்த்தகப் பெருமக்களே! வடபுலம் யுத்தத்திற்கு ஆளான போதெல்லாம் பெரும் பாதிப்புக்களைச் சந்தித்தவர்கள் நீங்கள். எங்கள் மக்களுக்காக நீங்கள் செய்த அர்ப்பணிப்புகள் கொஞ்சமல்ல. 

உங்கள் இனப்பற்றும் சமயோசித சிந்தனை ஆற்றலும் எங்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை தட்டுப்பாடான நேரத்திலும் இங்கு கொண்டு வந்து கொடுத்த பெருமைக்குரியவர்கள் நீங்கள்.

தமிழர் தாயகத்தில் அகிம்சை வழிப்போராட்டம் என்றால் அது கடைகளைப் பூட்டிய உங்களின் போரா ட்டம் என்றுதான் அறிந்ததுண்டு.  கடைகள் திறக்கப்பட்டு, சந்தைகள் இயங்கிய நிலையில் தமிழர் தாயகத்தில் அகிம்சை வழிப்போரா ட்டம் நடத்தப்பட்டதான வரலாறு இல்லை என்பதே உண்மை. 

எனினும் இன்றைய சூழ்நிலையில் உங்களிலும் ஒரு சிலர் அரசியல் வயப்பட்டுவிட்டனர். இதனால் உங்களின் பலமான ஒற்றுமைக்கு பங்கம் வந்துவிட்டதோ என்று எண்ணி வேதனைப்பட நேர்ந்துள்ளது. 

சிலர் அரசியல் வயப்பட்டுவிட்டனர் என்று சொல் வதற்காக வர்த்தகர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறு என்பதாக யாரும் பொருள் கொள்ள வேண்டாம். 

வர்த்தகப்பெருமக்கள் தாராளமாக அரசியலில் ஈடுபடலாம். ஏனெனில் எம் மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர்களில் பலர் உங்களில்தான் இருக்கிறீர்கள். அரசியலில் ஈடுபடுவதற்காக தமிழ் மக்களின் நலன்சார்ந்த விடயங்களில் நீங்கள் சொல்ல வேண்டியதை-செய்ய வேண்டியதை தந்திரமாகத் தட்டி விடு வது தர்மமாகாதது என்பதே நம் கருத்து. 

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் மிகப்பிரபல்யமான வர்த்தகர். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்த போதிலும் தமிழ் மக்களுக்காக அவரின் குரல் ஒலித்தது. சிங்கள மொழியில் அவர் ஆற்றிய பாராளுமன்ற உரைகள் காத்திரமானவை. 

எனவே, அன்புக்குரிய வர்த்தகப்பெரு மக்களே! நீங்கள் மிகவும் துணிந்தவர்கள். எந்தக் கருத்தையும் ஆழமாகத் துணிந்து நின்று முன்வைக்கக் கூடி யவர்கள். உங்கள் சார்பில் அமைப்புகள் இருப்பினும் அந்த அமைப்புகளை விட நீங்கள் தனித்து நின்று ஒரே முடிவை எடுக்கவல்லவர்கள். 

அண்மையில் யாழ்ப்பாண வர்த்தக சங்கம் ஒன்று தமிழ் மக்கள் பேரவை நடத்தும் பேரணி தொடர்பில் வெளியிட்ட செய்தி கண்டு அதிர்ந்து போனோம். ஏன் தான் இப்படி என்று வேதனைப்படுவதைத் தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை. 

இருந்தும் யாழ்ப்பாண வர்த்தகப் பெரு மக்கள் நிச்சயம் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பர் என்பது நம் அசைக்கமுடியாத நம்பிக்கை. வர்த்தக நிலையங்கள், சந்தைகளைப் பூட்டி பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுள்ளது. இந்தக்கோரிக்கைக்கு எங்கள் வர்த்தகப்பெருமக்கள் நிச்சயம் ஆதரவு வழங்குவர் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. 

தமிழ் மக்கள் பேரவை என்பது ஒரு மக்கள் அமைப்பு. அங்கு கட்சி பேதங்கள் எதுவும் கிடையாது. தமிழ் மக் களின் நலன் என்பதைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் அற்ற அமைப்புத்தான் தமிழ் மக்கள் பேரவை. 

அன்புக்குரிய வர்த்தகப்பெரு மக்களே! நல்லாட்சியை உருவாக்கியவர்கள் நாங்கள். எனவே அந்த நல்லாட்சியிடம் எங்கள் கோரிக்கைகள் முன்வைப்பது தவறா? நல்லாட்சி அமைவதற்கு நாமே காரணம் என்றால் எங்கள் விடயங்கள் தொடர்பில் நல்லாட்சியிடம் கோரிக்கை விடுவதுதானே நியாயமானது. இருந்தும் சிலர் இந்தப் பேரணியைத் தடுப்பதற்கு கடும் பிரயத்தனம் செய்கின்றனர். 

இவர்களைப் பார்த்து நாம் கேட்பதெல்லாம் நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலையை, கனகாம்பிக்கை அம்மன் ஆலயத்துக் காணியில் புத்தர் சிலை இது போல தமிழர் தாயகத்தில் புதிது புதிதாக புத்தர் சிலை அமைப்பது ஏன்? நல்லாட்சி இதைத் தடுக்காதது எதற்காக?

இதைத் தடுக்கவேண்டும் என்று நாம் கேட்டால் அது தவறா? அன்புக்குரிய வர்த்தகப் பெரு மக்களே! கண் ணீர் விடுகின்ற தாய்மார் ஒரு புறம், சொந்தக் காணிக்குப் போக முடியாத எங்கள் சொந்தங்களின் பரிதாபம் மறுபுறம், போரில் உயிரிழந்தவர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்காத துயரம். இந்நிலையில் நீங்களே நீதிபதிகள். நடக்கின்ற பேரணியில் நீங்கள் நடப்பது தான் நீங்கள் எழுதும் தீர்ப்பாக அமையும்.