பான் கீ மூன் - ஜனாதிபதி இன்று சந்திப்பு
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து கேட்டறிவாரென தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து காலிக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா செயலர் அங்கு ‘நல்லிணக்கமும் ஒருங்கிணைந்து வாழ்தலில் இளைஞர்களின் வகிபாகமும்’ என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
தொடர்ந்து நாளை யாழ் செல்லவுள்ள ஐ.நா செயலாளர் நாயகம், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்கவுள்ளதோடு, அங்குள்ள நலன்புரி முகாமொன்றிற்கும் நேரடியாக சென்று பார்வையிடவுள்ளார்.
அத்தோடு, நாளை கொழும்பில் சபாநாயகர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். அதனையடுத்து கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலும் ஐ.நா செயலாளர் நாயகம் கலந்துகொள்ளவுள்ளார்.
நேற்று இரவு நாட்டை வந்தடைந்த ஐ.நா செயலாளர் நாயகம், நேற்று இரவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.