மன்னாரில் இரகசியமாக நடத்தப்பட்ட காணி குறித்த கலந்துரையாடல்
காணிப் பிரச்சினை தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டத்தில் இரகசியமான முறையில் இடம்பெற்றுள்ளது
மன்னார் மாவட்டத்திற்கு நேற்று (சனிக்கிழமை) காலை விஜயம் செய்திருந்த நிலையான அபிவிருத்தி மற்றும் வன விலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட குழுவினர், மன்னார் மாவட்டச் செயலகத்தின் பின்கதவால் சென்று குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கலந்துரையாடலின் போது, வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குல காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, வன ஜீவராசிகளின் நிலங்களை பாதுகாப்பது தொடர்பிலும், வங்காலை கிராமப்பிரச்சினை, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, அண்மைய வர்த்தமானி பிரகடனங்கள், பெரியமடு, மடு பிரதேசங்களின் காணிகள் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமானவை என பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் ஆராயப்பட்டதோடு, எதிர்காலத்தில் எவ்வாறு இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல், மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், திணைக்கள தலைவர்கள், பொலிஸ், கடற்படை, இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.