Breaking News

நல்லிணக்கம் என்பது புலிகளின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதல்ல!



நல்லிணக்கம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்பதையெல்லாம் செய்து கொடுப்பது அல்லவென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐ.நா. கூட்டத்துக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்பட இடமளிக்கப் போவதில்லையென ஐ.நா. உரையில் அறிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் யாது கருதுகின்றீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபயவிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

நேற்று (23) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் எந்தவொரு தலைவரும் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட இடமளிக்கக் கூடாது. இதற்காக சில உபாயங்களைக் கையாள வேண்டும். நான் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போது யுத்தம் முடிந்து கடந்த 5 வருடங்களாக முன்னெடுத்தேன். இதனால்தான், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பாதுகாக்க முடிந்தது.

கடந்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ. யினருடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதல்ல நல்லிணக்கம் என்பது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் கோட்டாபய விளக்கமளித்தார்.