எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கம் அஞ்சவில்லை – ருவான் விஜேவர்த்தன
வடக்கில் இருந்து படைகளை விலக்குமாறு சிலர் பேரணிகளை நடத்தினாலும், வடக்கில் இருந்து சிறிலங்கா படை முகாம்களை அகற்ற அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
”இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த கடும்போக்குவாத செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் சில கடும்போக்குவாதக் குழுக்களால் பேரணி நடத்தப்பட்டது. ஆலயங்களைக் கட்ட வேண்டாம் என்றும், வெளியிடத்தவர்களை அங்கு குடியேற்ற வேண்டாம் என்றும் அவர்கள் கோரினர்.
எனினும், அரசாங்கம் எமது இராணுவ முகாம்களை அகற்றாது. அவர்களின் சவால்களைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை.
அவர்களால் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும். தமக்குத் தேவையானவை குறித்து குரல் எழுப்ப முடியும். அவர்களின் தடைகளைக் கண்டு அரசாங்கம் தனது பாதையில் இருந்து திரும்பாது.