இராணுவ வசமுள்ள காணிகள் தொடர்பாக தேசிய கொள்கை
இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்கு அவசியமான, இராணுவம் மற்றும் காவற்துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வரைந்துள்ளது.
தனியார் நிலங்கள் மற்றும் அரச நிலங்கள் தொடர்பாகவும் இவற்றுள் நாட்டின் முப்படைகளில் ஒன்றால் அல்லது காவற்துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் தொடர்பான துல்லியமான வரைபடம் ஒன்றை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுடன் இணைந்து தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் இந்தத் தேசியக் கொள்கை கோரிக்கை விடுத்துள்ளது.
சிறிலங்கா அரசானது பொதுப் பயன்பாட்டிற்குத் தேவை என உறுதிப்படுத்தாத அனைத்து நிலங்களும் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தேசியக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அல்லது அபிவிருத்தி நோக்குடன் இந்தக் காணிகள் கையகப்படுத்தப்பட்டால் அவை மிகவும் கவனமாக ஆராயப்பட்டு அதாவது இவற்றுக்குப் பதிலாக வேறு காணிகள் உள்ளனவா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் காணிகள் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள தேசியக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படாத நிலங்கள் அதாவது இராணுவத்தினரால் விவசாய உற்பத்திகள், சுற்றுலாத் துறை மற்றும் களியாட்டத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சால் எழுதப்பட்ட ‘போரால் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான நிலையான தீர்வுகள் தொடர்பான தேசியக் கொள்கை’ தற்போது சிறிலங்கா அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகளால் காணிகள் உரிமை கோரப்படுதல் மற்றும் முரண்பாட்டிற்குரிய காணிகளை உரிமை கோருதல் போன்றன மக்களை மீள்குடியேற்றுவதற்குத் தடையாக உள்ள ஏனைய விடயங்களாகும்.
இத்தேசிய கொள்கை ஆரம்பத்தில் வரையப்பட்ட போது உள் நாட்டில் இடம்பெயர்ந்த பெரும்பான்மையான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருந்தனர். ஆனாலும் அப்போதும் 40,000 வரையான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்த நிலையிலும் 100,000 வரையான இலங்கையர்கள் இந்தியா மற்றும் ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்த நிலையிலும் இருந்தனர்.
அத்துடன் மீள்குடியேற்றப்பட்ட ஒரு தொகுதி மக்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையிலிருந்தனர். அதாவது இடம்பெயர்ந்த மக்களால் மாவட்ட மற்றும் மாகாண அதிகாரிகளிடம் ஆலோசிக்காது அல்லது பாதிக்கப்பட்டவர்களிடம் தெரியப்படுத்தாது உரிமைகொள்ளப்பட்ட சில காணிகளை அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் அரச பயன்பாட்டிற்காக நிலங்களை வேறாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தத் திணைக்களங்களுக்குள் வன, வனவிலங்கு மற்றும் தொல்லியல் திணைக்களங்கள், மகாவலி, நகர அபிவிருத்தி அதிகாரசபைகளும் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான நில விவகாரங்களை வெளிப்படையாக மீளாய்வு செய்யுமாறும் சாத்தியப்படும் சந்தர்ப்பங்களில் சர்ச்சைக்குரிய நிலங்களை அவற்றின் சரியான உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறும் தேசியக் கொள்கை வரையறுத்துள்ளது.
வடக்கு கிழக்கில் நிலவும் நில விவகாரங்கள் குறிப்பாக அரசிற்குச் சொந்தமான நிலங்கள் தொடர்பாக நீண்டகாலமாகத் தொடரும் சர்ச்சைகள் தீர்க்கப்பட வேண்டும். இவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என தேசியக் கொள்கை வலியுறுத்துகிறது.
இவ்வாறான நிலப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது காலாதி காலமாக சமூகங்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்பட முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக ஒருபோதும் நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிராத உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் அவலநிலையும் இத்தேசியக் கொள்கையில் கோடிட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.
நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டு அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டால் மாத்திரமே நிலையான தீர்வை எட்டமுடியும் எனவும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள முகாம்களில் கிட்டத்தட்ட 3000 இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதாகவும் தேசியக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருவதற்கு முயற்சிக்கும் அகதிகளின் பிரச்சினைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அவை தொடர்பாகத் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த சமூகங்களுக்கு தகவல்களை வழங்கும் பரப்புரைகளை மேற்கொள்ளுதல், இவர்கள் முக்கியமான அடையாள ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுசரணையாக இருத்தல், இவர்கள் தம்மிடம் வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் உடைமைகளை சிறிலங்காவிற்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளைச் செய்துகொடுத்தல், சொந்த இடங்களுக்குத் திரும்பிய இடம்பெயர்ந்த மக்கள் பெற்றுக்கொண்ட உதவிகளை இவர்களும் பெற்றுக்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பதை உறுதிப்படுத்துதல், இவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளில் பெற்றுக்கொண்ட கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளை பாடசாலை அனுமதி போன்ற சில தேவைகளின் போது ஏற்றுக்கொள்ளுதல், பாதுகாப்புக் கெடுபிடிகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு உதவுதல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகளைச் செயற்படுத்த வேண்டும் என தேசியக் கொள்கை வலியுறுத்துகிறது.
போரின் போது கொல்லப்பட்டவர்கள், காணாமற்போனோர், அங்கவீனமுற்றோர், பொருளாதார ரீதியான இழப்புக்களைச் சந்தித்தோர் போன்றவர்களுக்கு இழப்பீட்டை வழங்கக் கூடிய வகையிலும் இடப்பெயர்வு மற்றும் அதன் தாக்கம் தொடர்பான பிரச்சினையை அடையாளங்கண்டு அவற்றை உறுதிப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான கொள்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வரையறுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கும் இவ்வாறான இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.