Breaking News

வடக்கிலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு கூறுவதற்கு சி.விக்கு அதிகாரம் இல்லையாம்!



வடக்கில் காணப்படும் புத்தர் சிலைகளை அகற்றுமாறு கூறுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அதிகாரம் கிடையாதென்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுமதியின்றி எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நாம் நிராகரிக்கவில்லை. எனினும் வடக்கிலுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான அதிகாரம் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கிடையாது.

தெற்கில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். நாம் தமிழ் மக்களிடம் நெருங்கிப் பழகி வருகிறோம். அதேபோன்று அவர்களும் எம்மிடம் நட்புடன் பழகுகின்றனர். இவ்வாறான நிலையில் விக்னேஸ்வரனின் கருத்துக்கள் நல்லிணக்கத்திற்கு தடையாக அமைகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரே சி.வியின் பயணத்தை எதிர்க்கின்றனர். காரணம் அவர்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றனர்.

வட மாகாணம் இலங்கையில் ஒரு பகுதியாக இருக்கும் நிலையில் அதனை பிரித்து தனி அலகாக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இதேவேளை, யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் தவறு செய்ததாக நிரூபணமானால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.