Breaking News

“எழுக தமிழ்” அல்ல “எழுக ஸ்ரீலங்கா” என அணித்திரள்வோம் - மனோ



எழுக தமிழ் என்ற கோசத்திற்கு பதிலாக எழுக ஸ்ரீலங்கா என்பதே தற்போதைய காலத்தின் தேவையாக இருப்பதாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

எனினும் எழுக தமிழ் பேரணி ஊடாக தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உதாசீனப்படுத்த கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுக தமிழ் பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகைளை பொருட்படுத்த தேவையில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ள நிலையிலேயே மனோ கணேசன் கொழம்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறிதல் தொடர்பிலான செயலமர்வின் தேசியமட்ட இரண்டு நாள் கூட்டம் நேற்றும் இன்றும் கொழும்பில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன், நாடளாவிய ரீதியில் விவாதத்திற்கு உள்ளான, கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

மனோ கணேசன் “யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையில் நான் அந்த கோரிக்கைகளை சாதகமாகவே பார்க்கின்றேன். எனினும் எழுக தமிழ் என்பதைவிட எழுக ஸ்ரீலங்கா பிரஜைகள் என்ற கோசம் எழுப்பப்படுவதே இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது.

இதனை நான் நேற்றைய தினமே மிகத் தெளிவாக கூறிவிட்டேன். நாம் தற்போது தமழர்களாகவோ சிங்களவர்களாகவோ பிரிந்து செயற்பட முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே நாம் எதிர்ப்பார்க்கும் இலக்கை அடைய முடியும். அதனால் எழுக ஸ்ரீலங்கா பிரஜைகள் என்று கோசம் எழுப்புவோம். அதற்காக வடஅ பகுதியிலிருந்து முன்வைக்கப்படும் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தக்கூடாது. அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி நாம் முன்னோக்கி நகர வேண்டும்.“

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சர்களான பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாசேன பரணவித்தாரன ஆகியோர் யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை பேரெழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியை கடுமையாக சாடியிருந்தனர்.

அது மாத்திரமன்றி அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவை இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் என்றும் கூறி முதலமைச்சர் மீது கடும் வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு சாடியிருந்தனர். இந்த நிலையிலேயே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.