“அம்பலமாக்கப்படும் இலங்கை அரசின் பொய்கள்”
இலங்கை அரசு திருந்தி விட்டதாக ஐநா அவையில் கூறுகிறது. ஆனால், ஈழத்தில் தொடர்ந்து இனப்படுகொலையை அரங்கேற்றுகிறது. குறிப்பாக நிலத்தை பறித்தும் பண்பாட்டை அழித்தும் இன அழிப்பினை இலங்கை அரசு தொடர்வதாக ஐ.நா கூட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டது.
இதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் – “இலங்கையில் இராணுவமயமாக்கலும் நில அபகரிப்பும்” (MILITARISATION AND LAND GRAB IN SRI LANKA) என்கிற சிறப்புக் கூட்டம் ஒன்றினை ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பின் ஒருங்கமைப்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சிறப்புக் கூட்டம் இடம்பெற்றது.
தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரின் இணைக் கூட்டமாக இந்த நிகழ்வு ஜெனீவாவில் உள்ள ஐநா அரங்கில் இடம்பெற்றது.
இச் சிறப்புக் கூட்டத்தை பசுமைத் தாயகம் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamils Forum – BTF), அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை (United States Tamil Political Action Council- USTPAC) ஆகிய அமைப்புகள் கூட்டாக இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளன.
அமெரிக்க ஓக்லாந்து நிறுவனத்தின் (The Oakland Institute, USA) அனுராதா மிட்டல், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் Wes Streeting MP மற்றும் Paul Scully MP ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.
“அம்பலமாக்கப்படும் இலங்கை அரசின் பொய்கள்”
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர், தமிழர்களிடம் இராணுவம் பறித்த நிலத்தை திருப்பி அளித்து வருவதாக ஐநாவில் அறிக்கை வாசித்தது இலங்கை அரசு. ஆனால், மகிந்த ராஜபக்சே அரசு 70,000 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்ட நிலையில், இன்றைய நிலையிலும் 67,500 ஏக்கர் தமிழரின் நிலம் இராணுவத்திடம் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் தாயகம் முழுவதும் ஏராளமான புத்தர் சிலைகளையும் புத்தமத கோவில்களையும் அமைத்து வருகிறது இலங்கை அரசு. ஊருக்கு ஊர் இத்தகைய புத்தர் கோவில்கள் தமிழர் பகுதிகளில் தொடந்து அமைக்கப்படுகிறது. என விமர்சனம் வெளியிடப்பட்டது.
தொடரும் இலங்கை அரசின் அக்கிரமங்கள் இக்கூட்டத்தின் மூலம் – ஐநா மனித உரிமைப் பேரவையில் எடுத்து வைக்கப்பட்டது. இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, புத்தமத கோவில்கள் குறித்த ஆவணம் ஒன்றும் இக்கூட்டத்தில் வெளியிடப்படது.
வெளிநாட்ட பிரதிநிதிகள் – அரசசார்பற்ற பிரதிநிதிகள் மற்றும் இலங்கைத் துாதரகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.