தலைவர் பிரபாகரன் அடக்கி வைத்திருந்த ஜாதி பேதம் மீண்டும் தலை தூக்கியுள்ளது! குரே கவலை
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினை ஜாதி, பேதம் என ஸ்ரீலங்கா ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாகவும் ஜாதி, பேதம் காரணமாக ஆதரவற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் விதம் மிலேச்சத்தனமாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் காணப்படும் ஜாதி, பேதங்கள் பற்றி பலர் பேசுவதில்லை. வடக்கில் தற்போது மீண்டும் ஜாதி, பேதம் தலைத்தூக்கியுள்ளது.
கிணற்றில் தண்ணீர் அள்ளவும் மாயானத்தில்தமது சடலங்களை புதைப்பதற்கும் தற்போது ஜாதி தடையாகியுள்ளது என மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
கீழ் ஜாதியில் பிறந்த காரணத்தினால், தாம் கடும் துன்பங்களை அனுபவிக்க நேர்ந்துள்ளதாக மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருந்த காலத்தில் ஜாதி பேதம் தலைத்தூக்காதபடி அதனை அடக்கி வைத்திருந்ததாகவும் தற்போது ஜனநாயகம் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் தாம் ஜாதி, பேதம் காரணமாக துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வாழும் சாதாரண மக்கள் கடந்த காலப் போரில் மாத்திரமல்லாது, காலநிலை, அரசியல் பொருளாதார பிரச்சினைகளை போல மனிதாபிமானமற்ற ஜாதி, பேதத்தாலும் துன்பங்களை அனுபவித்து வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.