காவிரி விவகாரம்: தமிழகத்தில் செப்டம்பர் 16-இல் முழு கடையடைப்பு போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக, கர்நாடகாவில் நடந்து வரும் வன்முறைகளை கண்டித்தும், கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட பல அமைப்புங்கள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதியன்று தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
செப்டம்பர் 16-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்த முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதென திமுக முடிவு செய்துள்ளதாக, திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டர் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகள் நடத்தும் இந்த கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், இந்த போராட்டத்திற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் கடந்த சில நாட்களாக குரல் எழுப்பி வரும் சூழலில், இந்த முழு கடையடைப்புப் போராட்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.