வடக்கில் எதிர்பார்த்த அளவிற்கு போராட்டங்கள் இல்லை-என்கிறார் ஜனாதிபதி
வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பாரியளவில் போராட்டங்கள் நடக்குமென நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போராட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
இங்கு கேள்வியெழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் வடமாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினீர்கள். ஆனால் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்கு காணியை சுவீகரிக்க நேற்று முதலாம் திகதியும் அளவீடு நடத்த முயற்சிக்கப்பட்டது.
இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இதேபோல் பல போராட்டங் கள் வடக்கில் இடம்பெறுகின்றன. நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இதற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று வினா தொடுத்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ஐ.நா.செயலாளர் நாயகத்தின் வருகையையொட்டி வடக்கில் பெரியளவில் போராட்டங்கள் நடத்தப்படலாம் என்று நான் எதிர்பார்த்திருந்தேன்.
நான் எதிர்பார்த்த அளவுக்கு அங்கு போராட்டங்கள் நடக்கவில்லை. சின்னச்சின்ன போராட்டங்களே இடம்பெற்றன. ஆனால் இந்தப் போராட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது.
பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிக்கும் விடயத்தில் பல்வேறு பிரச்சினைகளை நாம் எதிர்நோக்கி வருகின்றோம்.நலன்புரி முகாம்களில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு சொந்தக் காணிகளே வேண்டும் என்கின்றனர்.
ஆனால் வேறு சிலர் தாம் வாழக் கூடிய பொருத்தமான காணியை தந்தால் போதும் என்கின்றனர். இவ்விடயத்தில் நில அளவீடு செய்யும்போது போராட்டமும் நடத்துகின்றனர்.
அகதி முகாம்களில் உள்ளவர்களை காணி வழங்கி குடியேற்ற முயன்றால் அங்குள்ள கடும் போக்காளர்கள் அந்தக் காணியைப் பெற வேண்டாமென்று கோருகின்றனர்.
இத்தகையவர்களுக்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விருப்பமில்லை. கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் நாம் பெருமளவு காணிகளை மீள வழங்கியுள்ளோம். ஏனைய காணிகளையும் மீளக் கையளிக்க விரைவில் நடவடிக்கை எடுப்போம். என்றார்.