Breaking News

ஸ்ரீலங்காத் தூதுவரை தாக்கிய தமிழர்களை தண்டிக்க வேண்டும்; சபையில் சம்பந்தன்



ஸ்ரீலங்காவின் ஸ்திரத்தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மலேசியாவில் வைத்து ஸ்ரீலங்காத் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய தமிழர்கள் உட்பட அனைவரையும் ஸ்ரீலங்காவிற்கு அழைத்துவந்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் பதற்றமான நிலையும் அமைதியற்ற சூழலும் நீடிக்க வேண்டும் என்று விரும்பும் தரப்பினரே மலேசியாவிற்கான ஸ்ரீலங்கா தூதுவர் மீதான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

மலேசியாவிற்கான ஸ்ரீலங்கா தூதுவர் இப்ராஹீம் அன்சார் மீது நேற்று முன்தினம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.

மலேசியாவிற்கு விஜயம்செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழத் தமிழ் ஆதரவாளர்களான மலேசியத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு நாடாளுமன்றில் கடும் கண்டனம் வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இவ்வாறான சம்பவங்களால் தமது நாட்டின் அமைதியும், ஸ்திரத்தன்மையும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“மலேசியாவில் வைத்து தூதுவரை தாக்கிய சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்த விடயம் நாடாளுமன்றில் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது. இதற்கு வேறு பின்னணிகள் இருந்தாலும் இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக கடும் தண்டனை எடுக்கப்பட வேண்டும்.

அதில் ஸ்ரீலங்கா பிரஜைகளாக இருந்தால் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வந்து இந்த நாட்டின் சட்டத்திற்கு அமைய தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் இதில் ஸ்ரீலங்கா பிரஜைகளுக்குத் தொடர்பில்லை என்று பிரதமர் கூறியுள்ளார். நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இந்த அமைதியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.

இவ்வாறான சம்பவங்கள் தேவையற்றவை என்பதே எனது கருத்து. இவ்வாறான சிலரது முட்டாள்தனமான நடவடிக்கைகள் எவ்வாறான கடும் பிரதிபலிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கலாம். அதனால் இவ்வாறன நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஸ்ரீலங்கா ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த விரும்பாதவர்களின் கையாட்களாக செயற்படுகின்றார்கள் என்பதை உணர்ந்துகொள்வதில்லை.

அவ்வாறான நபர்கள் ஸ்ரீலங்கா தொடர்ந்தும் குழப்பமான நிலையிலும் பதற்றமாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக எந்த சந்தர்ப்பத்திலும் மோதல்கள் வெடிக்கலாம் என்பதையே அவர்கள் விரும்புகின்றனர். இவ்வாறான நபர்கள் தமது அரசியல் சுய லாபங்களுக்காக செயற்படுகின்றனரே ஒழிய இந்த நாட்டின் நலன் கருதி செயற்படுவதில்லை.

இவ்வாறான சக்திகளின் கையாட்களாக செயற்படுவதற்கு எவரும் முட்டாள்களாக இருக்க முடியாது. இவ்வாறான நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளால் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.“