Breaking News

 இலங்கையின் இன்னொரு சாதனையும் தகர்ப்பு



இலங்கை அணிக்கெதிரான நேற்று நடைபெற்ற முதலாவது T- 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ஈட்டியுள்ளது.

இலங்கை -அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T- 20 கிரிக்கெட் போட்டி பல்லேகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 263 ஓட்டங்களைக் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

மேக்ஸ்வெல் 65 பந்துகளுக்கு முகம் கொடுத்து 145 ஓட்டங்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அவுஸ்திரேலியாவை தொடர்ந்து 264 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கின்றது.

இப்போட்டியில் போட்டியில் இலங்கை அணியினால் கடந்த 2007 செப்டம்பர் 14 ஆம் திகதி கென்யாவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருந்த உலக சாதனை அவுஸ்திரேலியாவினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி T -20 போட்டியொன்றில் அதி கூடிய ஓட்டங்களாக 260 ஓட்டங்களை பெற்ற சாதனை நிலைநாட்டியிருந்தது. இச்சாதனையே நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது.