Breaking News

நாம் ஏன் பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் ? : பந்துல கேள்வி

நாம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பும் போது எம்மை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது போன்று பதிலளிக்கப்படுகின்றது எனக் குற்றம்சாட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரான பந்துல குணவர்த்தன, இவ்வாறு கேள்விகளுக்கு இடமளிக்காது விட்டால் நாம் ஏன் பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் எனக் கேள்வியெழுப்பியதோடு எதேச்சதிகாரமாக செயற்பட வேண்டாமெனவும் குறிப்பிட்டார். 


பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தை தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினரான பந்துலகுணவர்தன எம்.பி. நிலையியற் கட்டளை 84 இன் கீழ் 10 இன் பிரகாரம் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பும்போது அந்த வினாவை பொருட்படுத்தாது அவரை விமர்சிக்கும் வகையில் பதிலளிப்பது தவறாகும் என சபாநாயகர் கருஜயசூரியவின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 

இதன்போது இந்த விடயத்தை நீங்கள் முன்னதாகவே எனக்கு கூறியிருக்க  வேண்டும். தற்போது இதனை கூற முடியாது. எனவே நீங்கள் எழுத்து மூலமாக கோருங்கள் நான் அது தொடர்பாக கவனமெடுக்கின்றேன் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். 

எனினும் தனது நியாயமான விடயத்தை தயவு செய்து கருத்தில் கொள்ளுங்கள் எனக் கோரிய பந்துல குணவர்த்தன எம்.பி. பாராளுமன்றத்தில் நேற்று  முன்தினம் செவ்வாய்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதும் (நேற்று)  (புதன்கிழமை) நான் இனவரி திணைக்கள ஊழியர்கள் சுகவீன விடுமுறையில் செல்வது குறித்து வினாவொன்றை  முன்வைத்தேன். 

இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். அதனை அமைச்சர் பொருட்படுத்தாது அமைச்சர் தனிப்பட்ட வகையில் கேள்வியெழுப்பும் உறுப்பினர்களை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 

இது நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் தவறானதாகும் என்பதை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் என்றார்.