Breaking News

முதலமைச்சரை எங்களிடம் அனுப்புங்கள் அவர் எங்களுடைய வாழ்க்கையை நேரில் பார்க்கவேண்டும்



போர் நிறைவடைந்து 7 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. நாங்கள் போர் காலத்தில் வாழ்ந்ததை விடவும் மோசமான வாழ்க்கையே இப்போதும் வாழ்கிறோம்.

ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை எனவே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை எங்களிடம் அனுப்புங்கள் அவர் எங்களுடைய வாழ்க்கையை நேரில் பார்க்கவேண்டும் என முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம், புத்துவெட்டுவான், மற்றும் ஐயங்கன்குளம் ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கிராமங்களுக்கு மாகாணசபை உறுப்பினர் நேற்றய தினம் சென்றிருந்த போதே மக்கள் மேற்படி கோரிக்கையை உருக்கமாக முன்வைத்திருக்கிறார்கள்.

குறித்த கிராமங்களுக்கான விஜயம் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ஐயங்கன்குளம், புத்துவெட்டுவான், ஆரோக்கியபுரம் ஆகிய கிராமங்களுக்கு சென்று மக்களுடைய நிலமைகள் தொடர்பாக பார்த்திருக்கிறேன்.

பிரதானமாக விவசாயத்தை அடிப்படை வாழ்வாதார தொழிலாக கொண்டிருக்கும் இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு குளங்கள் புனரமைப்பு செய்யப்படாமை, விவசாய வீதிகள் புனரமைப்பு செய்யப்படாமை போன்றவற்றினால் விவசாயத்தில் பெரியளவில் வருமானம் பெற முடியாமல் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதேபோல் இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளி இடங்களுக்கு செல்வதற்கான வீதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொக்காவில் சந்தியில் இருந்து செல்லும் பிரதான வீதி அதிகளவு கிரவல் ஏற்றும் வாகனங்களின் பயன்பாட்டினால் முழுமையாக அழிக்கப் பட்டிருக்கின்றது.

இதேபோல் உள்ளக வீதிகள் எவையுமே சீர் செய்யப்படவில்லை. என்பதுடன் போக்குவரத்துக்கா ன பேருந்து சேவைகளும் இந்த பகுதிகளுக்கு இல்லை.

இதேபோல் கல்வி, சுகாதாரம் போன்றன முழுமையான வசதிகள் இல்லாத நிலையில் இருக்கிறது. இதனால் மக்கள் வெளி இடங்களுக்கு வருவதற்கும், திரும்ப செல்வதற்கும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.


மேலும் மக்களுக்கு நிரந்தர வீட்டு திட்டங்கள், மலசலகூட வசதிகள் போன்றனவும் முறையாக இல்லை. படையினர் சில இடங்களில் வீடுகளை அமைத்து கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் கொடுத்த வீடுகள் முழுமையாக சேத மடைந்திருக்கும் நிலையில் மக்கள் அந்த வீடுகளை விட்டு வெளியே வந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதேபோல் மீள்குடியேற்றப்பட்ட காலத்தில் ஐ.ஓ.எம் அமைப்பின் ஊடாக வழங்கப் பட்ட அரை நிரந்தர வீடுகளிலேயே பல மக்கள் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

போர் நிறைவடைந்து 7 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையிலும் தாம் எந்தவித வசதிகளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், எந்தவொரு அரசியல்வாதியும் தம்மை வந்து பார்க்கவில்லை. தமது பிரச்சினைகளை கேட்கவில்லை என மக்கள் உருக்கமாக கூறியிருக்கின்றனர்.

இதேபோல், வடமாகாண முதலமைச்சரை தங்கள் கிராமங்களுக்கு நேரில் அனுப்பிவைக்குமாறும் முதலமைச்சர் தங்கள் பிரச்சினைகளை நேரில் பார்க்கவேண்டும் எனவும் அதற்கு ஆவண செய்யுமாறும் மக்கள் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள்.

இந்த வகையில் மக்களிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கு இந்த விடயத்தை தெரியப்படுத்துவதுடன் மக்களுடைய வேண்டுகோளுக்கு ஒத்திசைவாக காடுகளுக்கு மத்தியில் தனித்து விடப்பட்டிருக்கும் மக்களை நேரில் பார்வையிடவேண்டும் என தாம் கேட்கவுள்ளதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் இதன்போது கூறியுள்ளார்.