Breaking News

உதயனின் தலைப்பு "இன்று தவறினால் ஐந்தாவது வாரமே எள்ளெண்ணெய் எரிக்க முடியும்"


ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது
பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன் (இது உண்மையல்ல) என்பதைப்போல யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரணியொன்று நடக்க ஏற்பாடாகியிருக்கும் நிலையில் மாவட்டத்தின்/மாகாணத்தின் பிராந்தியப் பத்திரிகையான உதயனின் பிரதான செய்தி "இன்று தவறினால் ஐந்தாவது வாரமே எள்ளெண்ணெய் எரிக்க முடியும்" என்று அமைந்திருப்பதோடு அதன் முன் பக்கத்தில் பேரணி குறித்த எந்தச் செய்தியும் இல்லை.

இது இவ்வாறு இருக்க,

நேற்றைய தினம் முழுவதும் தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் Sun News, கலைஞர் செய்திகள் போன்ற தி.மு.க சார்பு ஊடகங்களும் jeya plus போன்ற அ.தி.மு.க சார்பு ஊடகங்களும் Polimar, News 7, புதிய தலைமுறை, தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களும் ஜெயலலிதா பற்றிய செய்தியை ஒரேவிதமாகவே வெளியிட்டுக்கொண்டிருந்தன. ஜெயலலிதா காய்ச்சலால் குணமானதை உறுதிப்படுத்தி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையை எந்தவித பின்வாங்கலுமின்றி முக்கியமாக தி.மு.க சார்பு ஊடகங்கள் விரைவுச் செய்திகளாகத் தந்துகொண்டிருந்தன. இதற்காக தி.மு.க ஊடகங்கள் பரிசுத்தமானவை என்று சொல்லவரவில்லை, அரசியல் பேதங்கள் கடந்தும் மாநிலத்தின் முதல்வர் என்ற ரீதியில் அவ் ஊடகங்கள் செயற்பட்ட விதம் கவனத்தை ஈர்த்தது.

தமிழரின் போராட்ட காலத்திலிருந்தே போராட்டம் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் துணிவோடு தந்த பெருமை உதயனுக்கிருக்கின்றது. தமது உயிர்களையே அர்ப்பணித்துப் பணியாற்றிய எத்தனையோ பத்திரிகையாளர்கள் உதயனிலிருந்து நினைவுகூரத்தக்கவர்கள்.

ஆனால் இன்று? அற்ப அரசியலுக்காக உதயனின் இன்றைய செயற்பாடு ஊடக தர்மத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. பேரணியை எதிர்ப்பதோ ஆதரவு செலுத்துவதோ என்பதையும் தாண்டி பேரணி ஒன்று நடைபெற இருக்கின்றது என்றாவது ஒரு செய்தியைப் பிரசுரித்திருக்கலாமல்லவா.

ஆயுதப் போராட்டம் வீச்சுப்பெற்றிருந்த காலத்தில் பல இளைஞர் யுவதிகளை உசுப்பேற்றி உசுப்பேற்றி போராட்டச் செய்திகளையே தினந்தினம் கொடுத்த உதயன் இன்றைய போராட்டத்தைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ?

இதுதானா ஊடக தர்மம்? இதுதானா செய்தி ஒழுக்கம்?

Artist Shan