Breaking News

அமெரிக்க பிரதித் தூதுவர் யாழ். பயணம்



யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கப் பிரதித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானதை அடுத்து வடக்கில் குழப்பமான நிலை உருவானது.

சிறிலங்கா காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே கொழும்பிலுள்ள அமெரிக்க பிரதி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேற்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அவர் நேற்று யாழ். ஆயர் இல்லத்தில், யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன் போது, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியில் கத்தோலிக்கத் திருச்சபையின் பங்களிப்புத் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்தார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.