Breaking News

சுமந்திரனின் கருத்திற்கு சுரேஷ் கண்டனம்



வட மாகாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை வெளியேற்றியது ஒரு இனச் சுத்திகரிப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு, கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்களைக் கூறி தமிழ் – முஸ்லீம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு முஸ்லீம் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில், முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளுக்கும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றைய தினம் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றது. 

இதன்போது வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றிய சம்பவம் ஒரு இனச் சுத்திகரிப்பு என்பதில் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் குற்றம்சாட்டியிருந்தார். 

சுமந்திரனின் இந்தக் கூற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாணத்திலிருந்து முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமையானது ஒரு இனச்சுத்திகரிப்பு என்பதையும் சுமந்திரன் மீண்டும் மீண்டும் கூறிவருவதன் நோக்கம் புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மக்கள் அவ்வாறு வெளியேற்றப்பட்டமையை தவறு என்பதை அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை யுத்த நிறுத்த காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஹக்கீமை கிளிநொச்சியில் வைத்து சந்தித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை ஏற்றிருந்தார் என்பதையும் சுரேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். 

யுத்தம் நடந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து சகல மக்களும் வெளியேற்றப்பட்டு, யாழ்ப்பாணமே வெறிச்சோடிப்போயிருந்தது என்றும் கூறியுள்ள அவர், யுத்த கால கட்டத்தில் இத்தகைய தவறுகள் நடந்துதான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் யுத்தகாலத்தில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்படும்போது வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்தரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்திற்கு வட மாகாண சபை அக்கறையின்றி இருப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கும் சுரேஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார். 

புனர்வாழ்வு என்ற விடயம் மத்திய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட விடயமாக இருக்கும் நிலையில், எவ்வாறு வட மாகாண சபை மீது சுமந்திரன் குற்றம்சாட்ட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.