Breaking News

வடக்கின் நிலைமைகள் – மோடிக்கு விபரித்தார் மைத்திரி



வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விளக்கிக் கூறியுள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை, கோவாவில் இந்தியப் பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம் சிறிலங்கா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு இந்தியப் பிரதமர் இணங்கியதுடன், நீண்டகாலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை எட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

அதேவேளை, தென் மற்றும் மேல் மாகாணங்களில் நோயாளர்களுக்கு உதவும் நோக்கில் இந்திய அரசாங்கம் நோயாளர் காவு வண்டிகளை வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்ட சிறிலங்கா அதிபர், ஏனைய மாகாணங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுபடுத்த உதவுமாறும் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தச் சந்திப்பில் வடக்கில் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பாகவும் இந்தியப் பிரதமரிடம் சிறிலங்கா அதிபர் விளக்கமளித்துள்ளார்.