Breaking News

யாழ்ப்பாணத்தில் 3000 தொட்டிகளை அமைக்கவுள்ளது இந்தியா



யாழ்ப்பாணக் குடாநாட்டில் மழைநீரைச் சேகரிக்கும் 3000 நீர்த்தாங்கித் தொட்டிகளை அமைப்பதற்கு, இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலையான குடிநீர் ஆதாரத்தை வழங்கும் திட்ட முன்மொழிவு ஒன்றை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகம், இந்தியத் தூதரகத்திடம் கையளித்திருந்தது.

இந்த திட்ட முன்மொழிவின் அடிப்படையில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் 300 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கு 300 மில்லியன் ரூபாவை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய- சிறிலங்கா அரசாங்கங்களுக்கு இடையில் விரைவில் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.

இதற்கு சிறிலங்கா அமைச்சரவையின் ஒப்புதலைக் கோரும் பத்திரத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்.

அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.