Breaking News

யாழ் மாணவர்கள் விவகாரம்; உணர்ச்சிகளுக்கு ஊக்கமளித்தால் விளைவுகள் விபரீதமாகும் – முதலமைச்சர்



யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை தொடர்பில் வருத்தம் வெளியிட்டுள்ள முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரையும் பொறுமை காக்கவேண்டும் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரு பல்கலைக்கழக மாணவர்களின் அநியாயமான அகாலமரணம் ஆழ்ந்த துயரத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது. எந்தச் சூழலில் எதற்காக அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

பொலிஸாரின் சமிக்ஞையை மீறி இரு இளைஞர்களும் பயணித்தார்கள் என்ற காரணத்திற்காக துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டார்களேயானால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆகக் குறைந்த பலப்பிரயோகம் நடாத்தப்படவேண்டும் என்ற நிபந்தனையை மீறிவிட்டார்கள் போன்றே தெரிகின்றது.

இது பற்றி நீதவான் ஆராய்ந்தறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று நம்புகின்றேன். நான் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் அறிக்கை வந்துள்ளதோ என்பதை அறியேன். அவரின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னரே சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் பொறுப்பானவன் என்ற வகையில் நான் எனது கருத்தை வழங்க முடியும்.

எனினும் இவ்வாறான செயல்கள் இனிமேலாவது நடைபெறாது பார்த்துக் கொள்ளவது எமது கடமையாகின்றது.

இறந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரத்தில் இந்த துன்பச் சூழலில் எமது இளைஞர் யுவதிகள் உள்ளடங்கலான அனைவரும் பொறுமை காக்க வேண்டுகின்றேன்.

எமது உணர்ச்சிகளுக்கு ஊக்கமளிப்பதால் ஏற்படும் பின் விளைவுகளை நாங்கள் எம் மனதில் நிறுத்தியே நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது