பௌத்தத்திற்கு முன்னுரிமை இல்லை: ரணிலின் கருத்திற்கு கூட்டமைப்பு மறுப்பு
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு த.தே.கூ. உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களும் இணங்கியுள்ளதாக கொலன்னாவை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.
எனினும், இதனை முற்றாக மறுத்துள்ள சுமந்திரன், புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவில் இதுகுறித்து கலந்துரையாடப்படவில்லையென்றும், தேர்தல் சீர்திருத்தம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் அதிகார பகிர்வு குறித்து மாத்திரமே இதுவரை பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மதச் சார்பற்ற ஒரு நாடாகவும், அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலுமே புதிய அரசியல் யாப்பு அமையவேண்டுமென, த.தே.கூ எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சுமந்திரன், இவ்வாறான நிலையில் தமக்கு உடன்பாடில்லாத விடயத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார்.








