Breaking News

ஜெயலலிதாவை ராகுல்காந்தி பார்த்தது மனிதாபிமானது: திருமாவளவன் கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெய லிதாவை சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தார்.

ராகுல்காந்தியின் திடீர் வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

ராகுல்காந்தியின் இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக சுப்பிரமணியசாமி ஜனாதிபதி ஆட்சியை தமிழகத்தில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததும், பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முயற்சிக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தவும், பா.ஜ.க.வின் ஒரு பினாமி அரசை இங்கே உருவாக்கவும் சதித்திட்டம் தீட்டுகிறதோ என்கிற சந்தேகத்தையும் உருவாக்கி உள்ளது.

இரு வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரை நேரிலே சந்திக்க சுப்பிரமணியசாமியோ, அல்லது பிரதமர் மோடியோ முயற்சிக்கவில்லை. ஆனால் முதல்வர் உடல்நிலையை பயன்படுத்தி இங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பா.ஜனதா முயற்சிக்கிறது.

முதல்வரின் உடல் நிலையை வைத்து அரசியல் ஆதாயம் தேட விரும்புவது பா.ஜனதாதான் என்பதை உணர முடிகிறது.

இந்த நிலையில்தான் ராகுல்காந்தியின் திடீர் சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது. எனவே பா.ஜனதாவின் சதி முயற்சியை முறியடிக்கிற வகையில் ராகுல்காந்தியின் பயணம் அமைந்திருக்கிறது என்று விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் அவருடைய சந்திப்பு முற்றிலும் மனித நேயத்தின் அடிப்படையிலான சந்திப்பு என்றே நான் நம்புகின்றேன். ராகுல்காந்தி செய்தியாளர்களின் சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு காங்கிரசின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார்.

வாழ்த்துக்கள் என்று மட்டும் கூறாமல் ஆதரவையும் தருகிறோம் என்று சொல்லி இருப்பதால் ஆட்சியை கலைக்க விடாமல் செய்யும் என்று அரசியல் ரீதியாகவே அவர் கூறியிருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அதே வேளையில் தமிழகத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி உள்ள நிலையில் ராகுல்காந்தியின் பதில் பல்வேறு யூகங்களுக்கு இடம் அளிக்கிறது. தி.மு.க. தலைவர் கலைஞரை சந்திக்காமல் உடனடியாக அவர் டெல்லிக்கு சென்றதும் இவ்வாறான சந்தேகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.

ஆனால் டெல்லியைப் பொறுத்தவரையில் கூட்டணி அரசியலை தாண்டி இப்படிப்பட்ட மனிதாபிமான சந்திப்புகள் அடிக்கடி நிகழ்வது உண்டு. தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லாவற்றையுமே கூட்டணி அரசியலோடு இணைத்து பார்க்கிற ஒரு கலாச்சாரம் வளர்ந்துள்ளது.

எனவே முதல்வரின் உடல் நலத்தின் மீதுள்ள அக்கறையின் அடிப்படையில் ராகுல்காந்தி மனிதாபிமானத்தோடு இந்த சந்திப்பை மேற்கொண்டார் என்று நம்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.