யாழ்.சம்பவத்திற்கு தமிழ்த் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டும்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு வடக்கின் தமிழ்த் தலைவர்களே பொறுப்புக்கூற வேண்டுமென, வடக்கின் தமிழ்த் தலைவர்களை இனவாதிகள் என தொடர்ந்தும் விமர்சித்து வரும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கும், பொலிஸாருக்கும், சட்டத்திற்கும் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணக்கருவை வடக்கின் தமிழ்த் தலைவர்களே தமிழ்ச் சமூகத்திற்கு போதித்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இதன் காரணமாகவே வடக்கு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தலைவர்களின் இவ்வாறான போதனைகளால் வடக்கிலுள்ளவர்கள் சோதனைச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்துவதில்லை என்றும் தலைக்கவசம் அணிவதில்லை என்றும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதில்லை என்றும் நிஷாந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான தவறான போதனைகளுக்கு பின்னணியில் பிரிவினைவாதமும் இனவாதமுமே மேலோங்கி காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் வரை அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








