புதிய சிக்கலில் மாட்டியுள்ள ராஜபக்ஷ ரெஜிமென்ட்
கடந்த ஆட்சியின் போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் காணி பெற்றுக்கொடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கதிர்காமம் கோவிலை சுற்றியுள்ள காட்டு பகுதியில் ஒருவருக்கு 15 ஏக்கர் என்ற ரீதியில், 15 நீதிபதிகளுக்கு காணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பிரபல நீதிபதிகளுக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய காணிகள் வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
காணி வழங்கல் தொடர்பில் நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, காணிகளை பெற்ற நீதிபதிகள் தொடர்பில் முழு நாட்டிற்கும் தகவல் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தெரிவு செய்யப்பட்ட பிரபல உயர் நீதிமன்ற நீதிபதிகள் 74 பேருக்கு சிங்கள மற்றும் தமிழ் புதுவருடத்திற்கும் நத்தாரின் போதும் வருடாந்தம் பெறுமதியான பரிசு பொருட்களை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போதைய காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட காமினி சேனாரத்னவின் சாரதியினால் குறித்த நீதிபதிகளிடம் பரிசு பொதிகள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் காமினி சேனரத் அவரது தனிப்பட்ட வங்கி கணக்குகளில் கோடி கணக்கான பணத்தை ஒரே நேரத்தில் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கமைய குறித்த சாரதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும், இலஞ்ச ஊழல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கும், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கும் வழங்கிய வாக்குறுதிகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியள்ளது.
அத்துடன் காமினி சேனரத்தின் ஆலோசனைக்கமைய தான் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு வருடாந்தம் இந்த பரிசு பொதிகளை வழங்கியதாக குறித்த சாரதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தனிப்பட்ட ரீதியில் உறுதி செய்துள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.