Breaking News

நாட்டை பிரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்: ஜனாதிபதி சூளுரை

நாட்டை பிரிக்க தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் வைத்து கடும் தொனியில் சூளுரைத்திருக்கின்றார்.


விளையாட்டுப் போட்டிகளுக்காகவும், நிர்வாகத்திற்காகவும் ஒன்பது மாகாணங்களாக பிரிந்து செயற்பட்டாலும் வேறு எந்த காரணத்திற்காகவும் பிரிந்து செயற்படவோ, அது தொடர்பில் சிந்திக்கவோ இடமளிக்கப் பொவதில்லை என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் முன்னிலையிலேயே ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயங்களை தெரிவித்திருக்கின்றார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றைய தினம் நிறைவு பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெற்றியாளர்களுக்கான கேடயங்களை வழங்கிவைத்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஸ்ரீலங்கா உட்பட ஒட்டு மொத்த உலக நாடுகளிலும் இன்று ஒழுக்கம், மனிதாபிமானம், கலாசார விழுமியங்கள் சீரழிந்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இதனாலேயே உலக நாடுகள் பலவற்றில் பல்வேறு காரணங்களுக்காக யுத்தங்களும், கொடூரமான வன்முறைகளும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் மானிட சமூகத்தை ஒழுக்கசீலர்களாகவும், பொறுமையும், பொறுப்பும், சிறந்த நட்பண்புகளை கொண்டவர்களாகம் மாற்றி, நல்லிணக்கத்தையும், அமைதியையும் கட்டியெழுப்ப வேண்டிய அத்தியவசியத் தேவை எழுந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இதற்கு விளையாட்டுத்துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.