சி.வியை இனவாதியென சித்தரித்த நிமல்காவிற்கு குருபரன் பதிலடி
மனித உரிமை செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள நிமல்கா பெர்னாண்டோ வட மாகாண முதலமைச்சர் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு வடக்கு கிழக்கு சிவில் சமூக அமையம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி மற்றும் அதில் வட மாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை மிகவும் மோசமான இனவாதத்தை தூண்டும் நடவடிக்கைகள் என குற்றம்சாட்டிய நிமல்கா பெர்னாண்டோ, வட மாகாண முதலமைச்சர் தனது இரண்டு புதல்வர்களையும் பேரணிகளில் இணைத்துக்கொள்வாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த முதலாம் திகதி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தென்பகுதியிலுள்ள முற்போக்கு சிங்கள தரப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவிக்கும் நிமால்கா பெர்னாண்டோவின் இந்தக் கருத்துகளுக்கும், பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞர்னாசார தேரரின் கருத்துகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்றும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமையத்தின் பேச்சாளரான குமாரவடிவேல் குருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் குருபரன் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.