அந்த மாணவியின் கனவுக்கு இந்த நாடு இடம் தருமா?
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் வட மாகாணத்தில் 2ஆம் இடத்தையும் ஈட்டிச் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி செல்வி ஜயனி உமாசங்கர், ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில்,
எனது எதிர்காலக் கனவு ஒரு மருத்துவராக வருவது என்பதுடன் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மாணவர்களே! இளைஞர்களே! கனவு காணுங்கள் என்ற டாக்டர் அப்துல் கலாமின் அறிவியல் அழைப்பின் ஓர் அங்கமாக மாணவி ஜயனி இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் எனக் கூறியிருந்தார் எனலாம்.
இந்த நாட்டைச் சேர்ந்த; இந்த நாட்டில் மிகப் பெரும் போட்டியாக இருக்கக்கூடிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த பத்து வயது மாணவியின் விருப்பத்தில் டாக்டராக வருவது சாத்தியமாகும் ஆனால் ஜனாதிபதியாக வரமுடியுமா? என்ற கேள்வி இங்கு எழுகிறது.
இந்த எழுகையின் அடிப்படை இந்த நாட்டில் அப்படியொரு சந்தர்ப்பம் தமிழ் மக்களுக்கு கிடைக்குமா? என்பதுதான்.
உலகம் முழுவதிலும் பிறந்திருக்கக்கூடிய பிள்ளைகள் தமது விருப்பமாக அந்த நாட்டின் உச்சமான அதிகார பதவிவரை கூறமுடியும்.
ஆனால் இலங்கையில் தமிழ் இனத்தில் பிறந்த ஒரு பிள்ளை இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று தனது விருப்பத்தை கூறலாமா? அதற்கு இந்த நாட்டில் சந்தர்ப்பம் உண்டா? என்பதுதான் கேள்வி.
ஆம், இலங்கையில் தமிழினத்தில் பிறந்த ஒரு குற்றத்துக்காக, ஒரு பிள்ளையின் இலட்சியம்; இலக்கு; கனவு; விருப்பம் என்பதுகூட மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் இங்கு வேதனைக்குரியது.
ஆம், இலங்கைத் தீவின் பேரன்புமிக்க சிங்கள மக்களே! இந்த நாட்டில் தமிழ் இனத்தில் பிறந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு பத்து வயதுப் பாலகி இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதே தனது இலட்சியம் என்று கூறியுள்ளார்.
அந்தக் குழந்தையின் இலட்சியம் நிறைவேறுவதற்கு அத்தனை சந்தர்ப்பங்களும் இந்த மண்ணில் உண்டா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
அப்படி நீங்கள் சொல்லாமல் மெளனமாக இருந்தால் அதன் பொருள் வரமுடியாது என்பது தான்.
அப்படியானால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்ன பிரச்சினை உண்டு என்றும் தனித்து அபிவிருத்தியை ஏற்படுத்திவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும்.
அதாவது ஈழத் தமிழ்க் குழந்தைகள் தங்கள் இலட்சியம் இந்த நாட்டில் நிறைவேறுமா என்பதை தெரிந்து கொண்டுதான் தமது இலட்சியத்தைத் தீர்மானிக்க முடியும். அந்தளவிலேயே எங்கள் நாட்டின் இனசமத்துவம் உள்ளது.
ஒரு பிள்ளையின் இலட்சியம் இனத்தின் பெயரால் தகர்க்கப்படுகிறது எனில், தமிழ் மக்கள் எப்போதுதான் தங்கள் இலட்சியம் தொடர்பில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்பதுதான் இங்கு ஏற்படக்கூடிய எழுவினா.