Breaking News

காவிரி பிரச்சனை குறித்து பிரதமர் மோடியிடம் முறையிடுவேன்: நாராயணசாமி

புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி நதிநீர் கண்காணிப்பு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா தலைமை செயலாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

புதுவை மாநிலம் சார்பாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உறுப்பினராக இருப்பார்.

காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நானும், அதிகாரிகளும் செல்கிறோம்.

கர்நாடகா அரசு காவிரி நீரை முறையாக திறந்து விட்டால் புதுவைக்கு 7 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் திறந்து விடும். காவிரி நீர் பிரச்சனையால் எங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் கர்நாடக அரசு, மத்திய அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் ஒரு சில தடுப்பு அணைகளையும் கட்டி தண்ணீரை தேக்கி உள்ளது. அதனையும் கண்காணிப்பு குழுவிடம் கூறுவோம்.

ஏற்கனவே நான் பிரதமரை சந்திக்க அனுமதி வாங்கி உள்ளேன். திட்டமிட்டபடி அவரை நாளை சந்தித்து காவிரி பிரச்சினை குறித்து முறையிடுவேன்.

காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் கூறியும் அதனை மத்திய அரசு அமைக்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசுகிறேன். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அரசு நியாயமாக நடக்கும்படி கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.