Breaking News

சுமார் 1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்

கரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது. இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்காவில் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாகாணங்களில் மணிக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால், பலத்த மழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டன. 

கியாஸ் நிறுவனங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து பல லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல் தாக்கிய பகுதிகளில் சுமார் 10 லட்சம் வீடுகளுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக ஹைதியில் உயிரிழப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு நிலவரப்படி மேத்யூ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 877 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை ஆயிரத்தை கடந்திருக்கும் என அஞ்சப்படுகிறது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 200 ஆண்டுகளில் இல்லாதபடி அமெரிக்காவை கடுமையாக சூறையாடிய மேத்யூஸ் புயலின் எதிரொலியாக வடக்கு கரோலினா மாநிலத்தில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மாத்யூ புயலின் பாதிப்பு தொடர்ந்து வருவதாகவும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பிட முடியாததாகும் என்று குறிப்பிட்டுள்ள ஒபாமா, பாதுகாப்பு எச்சரிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.