“எழுக தமிழ்” பேரணிக்கு பதிலடி கொடுக்க தயாராகும் மஹிந்த அணி!
நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்துவதாக புலம்பெயர்ந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்க எதிர்ப்புத் தெரிவித்தும், யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணிக்கு பதிலளிக்கும் வகையிலும் தெற்கில் பேரணிகள் மற்றும் மக்கள் கூட்டங்களையும் நடத்தவும் தாம் தீர்மானித்துள்ளதாகவும் கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளது.
”போராட்டத்திற்கு உயிரூட்டும் புதிய மக்கள் சக்தி” என்ற தொனிப்பொருளில் இரத்தினபுரி நகரில் அடுத்தமாதம் நடத்தவுள்ள பொதுக் கூட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கூட்டு எதிர்கட்சியினரால் நேற்றிரவு, கொழும்பு நாவல பிரதேசத்தில் நடத்தப்பட்டது.
இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த கூட்டு எதிர்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவுள்ள கூட்டத்திற்கு இப்போதிருந்தே மக்களைத் திரட்டும் பணிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.