Breaking News

அடுத்த முதலமைச்சர் தயார் -நா(கா)ய்நகர்த்தலை ஆரம்பித்தார் சிறீதரன்(நேர்காணல்)

‘அடுத்த வடமாகாணசபை தேர்தலில்
மாவை.சேனாதிராஜா போட்டியிடுவார். முதல்வர் விக்னேஸ்வரனிற்கு பதவி ஆசை கிடையாது. அடுத்த தேர்தலில் போட்டியிடுவதோ, தனிக்கட்சி ஆரம்பிப்பதோ அவரது நோக்கமல்ல. தமிழ் மக்களின் அபிப்பிராயங்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற முதல்வரின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் சிலரை அப்படி பேச வைத்துள்ளது’ என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.


முற்குறிப்பு-
வடமாகாண முதலமைச்சரின் இனவழிப்பு தீர்மானம் மற்றும் “எழுக தமிழ்“ நிகழ்வுகள் மூலம்  கடும் சினம்கொண்ட தமிழரசுக்கட்சி அண்மையில் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பால் மேலும் அச்சமடைந்திருப்பதாக தெரியவருகின்றது. இப்படியே நிலமை சென்றால் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற இடத்திற்கு விக்கினேஸ்வரன் சென்றுவிட்டால் போலி அரசியல்வாதிகளின் வாழ்வு அத்தோடு முடிவுக்கு வரும் என்பதால் முன்கூட்டியே காய்கள் நகர்த்தப்படுவதாக தெரியவருகின்றது.

அவரது முழுமையான நேர்காணல் இது-

கேள்வி: நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் திருப்பதிகரமானதாக அமைந்திருக்கின்றனவா?

சிறிதரன்: நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் திருப்தியற்ற நிலையில்தான் உள்ளனர். நல்லாட்சியை உருவாக்கி வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகளிற்கு தேவையானால் நல்லாட்சியாக இது இருக்கலாம். தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் வாழிடங்களிற்கு போக முடியவில்லை. காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் இல்லை. அரசியல்கைதிகள் விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றான சட்டம் தயாரிக்கப்படுகிறது. புதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதுதானா நல்லாட்சி?

தமிழ் மக்களோ, நாடோ எதிர்பார்க்கும் நிலைமையை நல்லாட்சி உருவாக்கவில்லை. காலங்காலமாக தமிழர்களை ஏமாற்றிய சிங்கள தலைமைகளின் தொடர்ச்சியாகத்தான் இந்த அரசும் இருக்குமென நினைக்கும் சூழல்தான் தென்படுகிறது.

கேள்வி: புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடிப்படையில் அதிகார பகிர்வு இடம்பெறுமென நினைக்கிறீர்களா?

சிறிதரன்: புதிய அரசியலமைப்பு வித்தியாசமானது. இதுவரையான அரசியல் யாப்புக்கள், திருத்தங்கள் எல்லாம் தமிழ் மக்களுடைய விருப்பங்களை பிரதிபலிக்காமல், இனப்பிரச்சனைக்கு தீர்வை முன்வைக்கும் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.
ஆனால் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய சில எண்ணங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. அது அரசியலமைப்பிலே கொண்டு வரப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவதாக, இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசொன்றை அமைத்துள்ளார்கள். அடுத்த சிறிய முன்னேற்றமாக இதை கருதிக் கொள்ளலாம்.
வடக்கு கிழக்கு இணைப்பு, காணி பொலிஸ் அதிகாரம் என்பவை தமிழர்களின் எதிர்பார்ப்பு. இவை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகங்களிற்கு அப்பால், அவை நிறைவேற்றப்பட்டாலே அது எல்லோருடைய எதிர்பார்பையும் நிறைவேற்றும்.

இந்த யாப்பு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று, சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்பட வேண்டும். பௌத்த பெரும்பான்மையினர் தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிப்பார்களா என்பது சந்தேகம்தான். சர்வஜன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், சிங்களவர்களோடு சேர்ந்து வாழலாமா என்ற வாக்கெடுப்பை வடக்கு கிழக்கில் நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாமல், பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக அதே போன்று வேறு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சமஸ்டியும் இல்லாமல் ஒரு அரசியலமைப்பு கொண்டு வரப்படுமாயின் ஏற்றுக்கொள்வீர்களா?

சிறிதரன்: வடக்கு கிழக்கு இணையாத தீர்வுத் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. அதேபோல பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒரு அரசியல் திர்வுத்; திட்டத்தையும் ஏற்கப்போவதில்லை. மக்கள் எங்களுக்குத் தந்த ஆணையை நீதியான முறையிலும் ஐனநாயக முறையிலும் மேற்கொள்வதே எங்களது தலையாய கடமை. அதிலிருந்த இம்மியளவும் நாங்கள் விலகமாட்டோம்.

கேள்வி: அண்மையில் நடந்த எழுக தமிழ் பேரணியில் நீங்கள் கலந்து கொள்வதாக இருந்ததாகவும், பின்னர் முடிவை மாற்றிக் கொண்டுவிட்டீர்கள் என்றும் கூறப்படுகிறதே?

சிறிதரன்: தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக, ஐனநாயக வழியில் முன்னெடுக்கின்ற போராட்டங்களை நாங்கள் யாரும் தடுக்கவும் இல்லை. அதற்குக் குந்தகமாக இருக்கவும் இல்லை. ஆனால் அந்தப் போராட்டத்தில் நான் பங்கு கொள்வதாக எங்கேயும் அறிக்கையும் விடவில்லை. யாருக்கும் உத்தரவாதம் வழங்கவும் இல்லை. எங்களுடைய கட்சி சார்பாக தமிழ் மக்கள் பேரவையோடு நீண்ட நேரப் பேச்சுக்களில் ஈடுபட்டபோது மிக தெளிவாக பலவற்றை எடுத்துக் கூறியிருந்தோம். அதாவது இதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால் அரசோடு பேசிக் கொண்டிருக்கின்ற போது இரண்டு முகங்களை வெளிக்காட்டாமல் இந்த டிசம்பர் வரையுமான காலத்திற்கு நாங்கள் பொறுமை காக்க வேண்டுமெனப் பார்க்கிறோம். அதற்குப் பிறகு இரண்டு தரப்பும் இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தோம். அந்தப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் நாங்கள் எந்த வார்த்தைகளையும் முன்வைக்கவில்லை.

கேள்வி: எழுக தமிழில் கலந்து கொள்ளாததற்கு இப்பொழுது ஒரு விளக்கம் சொல்கிறீர்கள். ஆனால், தர்க்கம் பிழைக்கிறதே… எழுக தமிழ் நடப்பதற்கு சில வாரங்களின் முன்னர் இதேவிதமான கோரிக்கைகளுடன் கிளிநொச்சியில்; பேரணியொன்றை நடத்தியிருக்கிறீர்களே?

சிறிதரன்: நாங்கள் கிளிநொச்சியில் நடத்தியது போராட்டமல்ல. ஒரு கவனயீர்ப்பை நடத்தினோம். சர்வதேசத்திற்கும்; இலங்கை அரசிற்குமான கவனயீர்ப்பது. அங்கு நாங்கள் பிரகடனங்கள் வாசிக்கவில்லை. கூட்டமைப்பின் கட்சிகள் சேர்ந்து, பிரிந்து நின்று எழுச்சிப் பிரகடனங்கள் செய்யவில்லை. நாங்கள் மென்போக்கு அரசியல் காலகட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

மலையக தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஒரு போராட்டத்தை மேற்கொள்ள இருக்கிறோம். முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போதும் போராட்டத்தை மேற்கொண்டோம். மக்கள் சார்பாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். வலிகாமம் வடக்கிலே போராடியிருக்கிறோம். அந்தக் காணிகளை விடுவிப்பதற்கான வழக்குகளைத் தாக்கல்களை செய்திருக்கறோம். அவ்வாறான பல வழிகளைக் கையாண்டு இருந்தோம். அந்த வழிகளை நாங்கள் கைவிடவில்லை. ஆனால் சில சில சந்தரப்பங்களில் சில கால கட்டங்கள் வழங்கப்படுவதுண்டு. நாங்கள் அந்தச் சந்தர்ப்பத்தை இந்த அரசிற்கு வழங்கியிருக்கின்றோம்.

கேள்வி: உங்கள் கிளிநொச்சி பேரணியில் முன்வைத்த விடயங்கள்தானே எழுக தமிழிலும் முன்வைக்கப்பட்டது. எழுக தமிழிற்கு மட்டும் ஏன் தென்னிலங்கையில் இவ்வளவு எதிர்ப்பு?

சிறிதரன்: எழுக தமிழ் பேரணியைச் செய்ததற்காக முதலமைச்சரை இனவாதியாச் சித்தரிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சம்மந்தன் ஐயா பாராளுமன்றத்தில் தெளிவாக பதில் கூறியிருக்கின்றார்.

முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச கூட விக்கினேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியிருக்கிறார். நாய்க்கு கல் எறிந்தால் எந்த இடத்தில் பட்டாலும் காலைத் தூக்குவது போல தமிழர்களுடைய உரிமைகள் தொடர்பாக நாங்கள் யார் பேசினாலும் சிங்களவர்கள் அதனை இனவாதக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது வழக்கமாகிவிட்டது. தென்னிலங்கையில் எதிர்க்கிறார்கள் என்பதற்காக நாம் அடங்கி, ஒடுங்கி உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது. நாம் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். சிங்களவர்களிற்கு முன்னரே நீண்ட வரலாற்றை கொண்டவர்கள். நாங்கள் வந்தேறு குடிகளல்ல. எமது உரிமைகளை கைவிட மாட்டோம்.

கேள்வி: அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பங்காளியாகிவிட்டதென கூட்டமைப்பிற்குள்ளேயே விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டதே?

சிறிதரன்: கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கிறது என்ற கருத்து தவறானது. கூட்டமைப்பில் இருந்து கொண்டே அவ்வாறான விமர்சனங்களைச் செய்பவர்கள் யாரும் கூட்டமைப்பை விட்டு விலகிச் செல்லவில்லை. அவர்கள் கூட்டமைப்பில் இருந்து கொண்டே இன்னுமொருவிதமான கருத்தை வெளியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கருத்துக்களை சொல்லும் உரிமை கூட்டமைப்பிலே இருக்கிறது. இவ்வாறான ஐனநாயக தன்மை கொண்ட கட்சி உலகில் எங்குமே இல்லை. இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ இவ்வாறு ஒரு கூட்டணிக்குள் இருந்து கொண்டு தேர்தல்களில் தோற்றுப் போன அணியோடு சேர்ந்து இன்னுமொரு அணியாக போராட்டங்களை முன்னெடுப்பதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டும்தான் நடக்கிறது. உலகில் வேறெங்கும் இப்படி இல்லை.

கேள்வி: தமிழரசுக்கட்சியில் அதிருப்தி கொண்ட அங்கத்துவ கட்சிகள் வடக்கு முதல்வர் தலைமையில் புதிய கட்சியொன்றை உருவாக்கும் சூழல் உள்ளதா?

சிறிதரன்: முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் மிக நேர்மையானவர். அவர் கை சுத்தமானது. மனம் சுத்தமானது. அப்பழுக்கற்றவர். அரசியலுக்கு கூப்பிட்டபோது கூட கடுமையாகத் தயங்கியவர். ஆனால் அந்தக் காலகட்டத்தில் அவருடைய வருகையும் எழுச்சியும் எங்களுக்குத் தேவைப்பட்டது. அதனை சரியாக எடைபோட்டுக் கொண்டவர் எங்கள் கட்சியின் தலைவர் சம்மந்தன் ஐயா.

விக்னேஸ்வரன் ஐயா இன்றைக்கும் கட்சித் தலைவர் சம்மந்தன் ஐயாவின் தலைமைக்கு கீழேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கிய அவருடைய பதிவுகள் அனைத்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழேயே இருக்கின்றது. கட்சியை உடைக்கும், கட்சிக்கு எதிரான அணியை உருவாக்கும் மலினமான அரசியலை செய்ய விக்னேஸ்வரன் ஐயா ஒரு காலமும் முனைய மாட்டார். அவர் அவ்வாறான எண்ணங்களைக் கொண்டவர் அல்ல.

விடுதலைப் புலிகள் கூட உயர்ந்த எண்ணங்களோடு அவரை பார்த்தார்கள். அது அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய தேவை புலிகளாலும் ஒரு காலத்தில் உணரப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கால கட்டம் பொருத்தமற்றதாக இருந்திருக்கலாம். யுத்தத்தின் பின்னரான சூழலில் அவரது தேவை அவசியப்பட்டது. கட்சியின் தெரிவும் அவருக்காக உழைத்த தொண்டர்களுடைய பணியும் அவரை தமிழர்களுடைய ஆபாத்பாண்டவனாக கொண்டு வந்ததில் எந்தத் தவறும் இல்லை. அவ்வாறானவரை புரிந்து கொள்ளாத சிலர்; இவ்வாறான அபசகுனமான வார்த்தைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர் கட்சி தொடங்குவார் அவருக்குப் பின்னால் அணி வரும் என பொய்யான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

கேள்வி: சரி. அவர் கட்சிக்குள்ளேயே இருந்தால் அடுத்த தேர்தலிலும் அவர்தான் முதலமைச்சர் வேட்பாளரா, அல்லது வேறு யாருமா?

சிறிதரன்: அவர் நல்ல மனம் படைத்த மனிதர். இறைபக்தி உள்ளவர். இறை சக்தி இருக்கிறது. அவர் சொன்ன சொல்லு மாறாத மனிதர். நேர்மையானவர். அவ்வாறானவரை அபகீர்த்தி செய்வதோ, சீண்டுவதோ காலத்திற்குப் பொருத்தமானதல்ல.

அடுத்த மாகாணசபைத் தேர்தலில் அனுபவம் வாய்ந்த வேட்பாளர் மாவை.சேனாதிராசா இருக்கிறார். எல்லா தகுதிகளை கொண்டிருந்த மாவை சேனாதிராசா கடந்த மாகாணசபை தேர்தலில் கட்சி தலைமை கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்னொருவருக்காக பாடுபட்டார்.
இந்த நல்ல மனசுள்ள மாவை சேனாதிராசா அடுத்த முறை பின்தள்ளப்பட சாத்தியக்கூறுகளும் இல்லை. அடுத்தமுறை மாவை சேனாதிராச முதல்வராவார். இதில் மாற்றங்கள் இல்லை. யாரும் இதற்கு தவறான வியாக்கியானங்களை வழங்க வேண்டிய அவசியமும் இல்லை.

பதவிகளில் தொடர வேண்டுமென்ற எண்ணங்களை விக்னேஸ்வரன் ஐயா கொண்டவரல்ல. ஏனென்றால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டு சமயத்தில் தலைவர் சம்மந்தன் ஐயா நேரடியாகவே ஆள்விட்டு விக்னேஸ்வரன் ஐயாவிடம் தமிழரசுக்கட்சி தலைமையை ஏற்குமாறு கேட்டிருந்தார். இது பலருக்குத் தெரியாது. அவரிடம் நேரடியாக கேட்டதாக பத்திரிகைளில் வந்திருந்தாலும் அவரும் அவர் மிகத் தெளிவாகவே மறுத்திருந்தார்.

‘நான் அவ்வாறான தலைமைகளில் எண்ணங்கொண்டவனல்ல. அந்தக் கட்சியினுடைய தலைமையை நடத்துகின்ற வல்லமையும் நேர்மையும் கொண்டவர் மாவை சேனாதிராசா. அவருக்கு பலமாக தமிழர்களின் உரிமைக்காக சேர்ந்து பயணிப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு நேர்மையான பார்வையுள்ள மனிதர் விக்கினேஸ்வரன் ஐயா. அவர் நினைத்திருந்தால் அன்றே அந்தப் பதவியைப் பெற்றிருக்க முடியும். ஆசை பதவி மோகம் இருந்திருந்தால் இன்று அவருடைய கையில் தமிழரசுக் கட்சி இருந்திருக்கும்;. யாரும் அவரை ஒன்றுமே செய்திருக்க முடியாத சூழல் இருந்திருக்கும். ஆனால் அவ்வாறான எண்ணங்களையோ பதவி ஆசைகளையோ பதவிகளுக்காக போராடுகின்ற மனநிலையோ விக்கினேஸ்வரன் ஐயா கொண்டவருமல்ல. அதேவகையான எண்ணங்களைக் கொண்ட மாவை சேனாதிராசாவும் பொருத்தமானவர். ஆகவே காலம் சரியானவர்களைத் தெரிவு செய்யும்.

முதலமைச்சர் தலைமையில் கட்சி உருவாகும். அந்தக் கட்சி அடுத்த மாகாணசபை தேர்தலில்; போட்டியிடும் என்று கூறப்பட்டாலும் அப்படி நடக்காது.

மூலம்: தீபம்


தொடர்புடைய செய்தி

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்