போரில் மட்டுமே வெற்றி; சமாதானத்தில் தோல்வி! - அமைச்சர் ஜோன் செனவிரத்ன ஒப்புதல்
போர் வெற்றி குறித்து எப்போதும் பெருமை பாராட்டி வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என அவரது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்த தற்போதைய தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தொழில் மற்றும் தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, நேற்று அந்தக் கட்சி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந் திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில், 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை வெற்றிகொண்டாலும் தேசிய சமா தானத்தை ஏற்படுத்த எங்களால் முடியாமல் போயுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் எங்களால் தேசிய சமாதானத்தை ஏற்படுத்த முடியாமல் போனது.
போரை வெற்றிக்கொண்டதாக பெருமை பாராட்டிவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு, நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நிறைய சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் அதனை அவர் பயன் படுத்தவில்லை.
இதனாலேயே கடந்த ஆட்சியில் தவிர்த்துக்கொள்ளப்பட்ட நல்லிணக்கம் மற்றும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் நான் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்க நேரிட்டது.
ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் இனங்களுக்கு இடையில் தேசிய சமாதானத்தை எப்போதோ இலகுவாக ஏற்படுத்தியிருக்க முடியும்.
எனினும் அனைவரும் இணக்கம் தெரிவிக்கக் கூடிய அதிகாரப் பரவலாக்கலை துரதிர்ஷ்டவசமாக எங்களால் ஏற்படுத்த முடியாமல் போனது. ஆகவேதான் நாங்கள் சிந்தித்தோம். எதிர்க்கட்சியாக இருப் பதை விட தேசிய அரசாங்கத்தின் ஊடாக பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமென நாம் கருதினோம்.
அதேபோல் மற்றுமொரு விடயம் இருக்கின்றது. தொடர்ச்சியாக நாம் எதிர்ப்பினை வெளியிட்டு வரும் தேர்தல் முறை. பெரும்பான்மை பலத்தைப் பெற்ற அரசாங்கம் இருந்தும் தேர்தல் முறைமையை மாற்றி யமைக்க எங்களால் முடியாமல் போனது. ஆகவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கருத்திற் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தினோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.